அனுமதி இல்லாத வைத்திய நிலையங்களிற்கு தடை: வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை!

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞா.குணசீலன் நேற்று(செவ்வாய்கிழமை) வவுனியாவிற்கு திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்டதுடன் தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்திருந்தார்.

இதற்கமைய உரிய அனுமதி இன்றி கதிர்வீச்சு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இரு வைத்தியசாலைகளின் மீது நடவடிக்கை எடுத்திருந்தார்.

அத்துடன், ஆயுர்வேத மருத்துவம் பயின்று விட்டு ஆங்கில மருந்துகள் வழங்கிய இரு வைத்திய நிலையங்களை அடையாளம் கண்டதுடன் அங்கிருந்து ஆங்கில மருந்துகளும் மீட்கப்பட்டன.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், ‘வவுனியாவிலே மருந்தகங்கள் மற்றும் சிகிச்சைநிலயங்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ விஐயத்தை மேற்கொண்டிருந்தோம். மருத்துவத்துறையில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக நாம் தொடர்சியாக சட்ட நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றோம்.

இதனடிப்படையில் வவுனியாவில் மூன்று தனியார் சிகிச்சை நிலயங்கள், இரண்டு மருந்தகங்கள், இரண்டு வைத்தியசாலை தரத்தில் உள்ள நிறுவனங்கள் எம்மால் நேரடியாக பார்வையிடப்பட்டது.

அதிலே இரண்டு மருந்தகங்கள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் பல வருடங்களாக இயங்கிவந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதனை விட மூன்று தனியார் வைத்தியர்களின் சிகிச்சை நிலயங்களை பார்வையிட்டிருந்தோம். அவர்கள் ஆயுர்வேத துறையிலே பட்டம் பெற்றவர்கள் ஆனால் ஆங்கில மருந்துவகைகளை மக்களுக்கு வழங்கிவருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

ஆகவே இதற்கமைய மூன்று இடங்களிலே பரிசோதனை செய்தோம் அதிலே இரண்டு இடங்களில் ஆங்கில மருந்துகள் எம்மால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் ஆங்கில மருந்தை வழங்கமுடியாது அது சட்டத்திற்கு முரணானது. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.

Related Posts