Ad Widget

அனந்தியின் குற்றச்சாட்டு உண்மையில்லை, சுமந்திரன் எம்.பி.விளக்கம்!

sumantheranஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ள நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அத்துடன், சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை வரைவை மேலும் காத்திரமானதாக்கி நிறைவேற்ற செய்ய வேண்டியதே எமக்‌குள்ள தற்போதைய கடமை. – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜெனீவாவுக்கு சென்றிருந்த வட மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன், அங்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தன்னை சுதந்திரமாக கதைப்பதற்கு சுமந்திரன் அனுமதிக்கவில்லை என்றும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அவர் வலியுறுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-

அனந்தியின் கருத்துகள் தொடர்பில் பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை. அதுகுறித்து நான் அதிகம் பேசவும் விரும்பவில்லை. அவரின் கருத்து அரசியல் சுயலாபத்துக்கானது. அமெரிக்கப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ள முக்கியமான தருணத்தில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ள அரசியல் சுயலாபக் கருத்து ஜெனீவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உண்மையில் இத்தருணத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். எமக்குள் வேற்றுமை கொள்ளக் கூடாது. இலங்கை தொடர்பான பிரேரணையை மேலும் காத்திரமாக்கி நிறைவேற்ற வைக்க வேண்டும். இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். கடந்த மாதம் நடுப்பகுதியில் 3 நாட்கள் அனந்தி ஜெனீவாவில் இருந்தார். நானும் இருந்தேன். அப்போது ஜெனீவாவிலுள்ள பலநாட்டு இராஜதந்திரிகளுடன் நாம் பேச்சு நடத்தினோம்.

இந்தச் சந்திப்புகள் குறித்து அனந்தி நாடு திரும்பியவுடன் பத்திரிகைகளுக்கு செய்திகளையும் பேட்டிகளையும் வழங்கியிருந்தார். அப்போது தான் பல நாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழர் பிரச்சினைகளை எடுத்துக்கூறினார் எனத் தெரிவித்திருந்தார். அத்துடன், சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்றும் அவர் கூறியிருந்தார். இது பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன. மேலும், கனடா, அமெரிக்க நாடுகளின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளில் சர்வதேச விசாரணை தேவை என்ற தொனியில் சுமந்திரன் எம்.பி. கருத்துக் கூறினார் என்றும் தான் கூறியவற்றை அப்படியே அந்த அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினார் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜெனீவாவில் மிகவும் கடுமையாக பிரேரணை இம்முறை வருவது சந்தேகம் எனத் தான் உணர்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படியான கருத்துகளைத் தெரிவித்திருந்த அனந்தி தற்போது திடீரென அதற்கு முற்றிலும் முரணான கருத்துகளை கூறியிருக்கிறார். ஜெனீவாவில் பல நாட்டு அதிகாரிகள் சந்திப்பில் தன்னைச் சுமந்திரன் எம்.பி. சுதந்திரமாகப் பேச விடவில்லை என்றும் சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. முன்னர் அனந்தியின் பேட்டிகளை பிரசுரித்திருந்த ஊடகங்கள் இப்போது அவர் மாறிக் கருத்துத் தெரிவிக்கும்போது, முன்னர் அப்படிக் கூறியிருந்தீர்களே, இப்போது ஏன் மாற்றிக் கூறுகிறீர்கள் என அவரிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. இது எமக்கு கவலை தருகிறது – என்றார் சுமந்திரன்.

Related Posts