Ad Widget

அநுராதபுரம் விமானப் படைத்தள கரும்புலித் தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை மறுப்பு

அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது.

16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நஷ்டப்படுத்தியது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்களைக் கொலை செய்ததாக, மேற்படி இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாக சட்டத்தரணிகள் கோரியதை அடுத்தே, அவர்களுக்கு பிணை வழங்க நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி மறுப்பு தெரிவித்ததுடன், அவ்விருவரையும் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான்புலி அமைப்பின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

Related Posts