Ad Widget

அத்துமீறுவோரை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உண்டு – ரணில்

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளது என இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள செவ்வியால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ranil-wickremesinghe_ND_TV

ஏற்கெனவே இந்திய ஊடகமொன்றுக்கு பேட்டியளித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என்ற கருத்தை வெளியிட்டிருந்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமிருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்து சென்றார். இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் மேற்கண்டவாறான கருத்தை பிரதமர் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளமையால், மீண்டும் அவருக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

அந்த செவ்வியில் மேலும் தெரிவித்த விக்கிரமசிங்க, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் இலங்கை மக்களை மோடி வெற்றிகொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளதாகவும் அதுவொன்றும் புதியதல்ல என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

Related Posts