Ad Widget

அடுத்த 2 வாரங்களில் கோவிட்-19 வைரஸ் பரவல் அடிப்படையில் கட்டுப்பாடுகள் இறுக்கப்படலாம்

அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

சுகாதார வழிகாட்டல்கள் கோரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும்.

தினசரி கோரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைந்துள்ளது. தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கை 50-60 க்கு இடையில் குறைவடைந்துள்ளது.

தேவைப்பட்டால் தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் மேலும் கடுமையாக்கப்படலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.

தடுப்பூசியின் முத்திரையைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்த இரண்டு வாரங்களில் 20 முதல் 30 வயதினருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அலகு வழங்கப்படுகிறது.

அனைத்து தடுப்பூசிகளின் செயல்திறன் விகிதமும் ஒரே மாதிரியாக இருப்பதால் தடுப்பூசிகளின் தயாரிப்பை தேர்வு செய்ய வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்துகின்றேன்- என்றார்.

Related Posts