Ad Widget

அடுத்த நகர்வு குறித்து புதனன்று கூட்டமைப்பினர் கூடி ஆராய்வு

sambanthan-tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை திருகோணமலையில் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர்.

இந்த முக்கிய சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுப் பேச்சுக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம், கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் தென்னாபிரிக்கா பயணம், ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐ.நா. உறுப்புரிமை நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை இலக்குவைத்துத் தொடரும் அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட சம கால நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் முதன்முதலாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் ஒன்றுகூடி முதலாவது சந்திப்பை நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் இரண்டாவது கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தநிலையில் மூன்றாவது கூட்டம் கடந்த 19 ஆம் திகதி யாழ்.மாவட்டத்திலேயே மீளவும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா, இல்லையா என்பது உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts