வேலைவாய்ப்பைத் தேடும் இளையோருக்கான தொழில் சந்தை முல்லைத்தீவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளை வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்த தொழில் சந்தையில் சுற்றுலா, நிதி, கட்டட நிர்மாணம், சந்தைப்படுத்தல் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகிய துறைகளைச் சார்ந்த 10 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

எனவே மாவட்டத்தில் தொழிலற்றிருக்கும் இளையோர்கள், கோவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தத் தொழில் சந்தையில் பங்கேற்று பயன்பெறுமாறு முல்லைத்தீவு மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவினர் கேட்டுள்ளனர்.