வேலணையில் மனித எச்சம் தோண்டும் பணி நிறுத்தம்

வேலணையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதியை இன்று தோண்டுவதற்காக இருந்த போதும் இறுதி நேரத்தில் நீதவானின் உத்தரவில் நிறுத்தப்பட்டுள்ளது.

human_born_07

வேலணை பிரதேச சபையின் வளாகத்தில் குழி தோண்டப்பட்ட போது மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதனையடுத்து மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று மேலும் தோண்டுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவிருந்தது.

எனினும் குறித்த இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ. சபேசன் குறித்த பகுதி முன்னர் மயானமாக இருந்தமையால் வரைபடங்கள் மற்றும் இட அமைவு குறித்த வரலாறுகள் என்பன குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் வேலணை பிரதேச சபை எத்தனையாம் ஆண்டு குறித்த காணியை பெற்றுக் கொண்டது என்றும் அங்கு எப்போது கட்டடம் கட்டப்பட்டது என்ற அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தோண்டும் பணி இன்று நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மின்மாற்றி வேலணைப் பிரதேச சபையின் வளாகத்திற்குள் உள்ளது. அதனை இடம்மாற்றுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட குழிகள் கடந்த 18 ஆம் திகதி வெட்டப்பட்டன. அதன்போது அதற்னுள் இருந்து மண்டை ஓடுகள் உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன.

எனவே குறித்த விடயம் தொடர்பில் 19 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் நீதிமன்றுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து குறித்த பகுதிக்கு வந்த நீதவான் குறித்த எச்சங்கள் நீண்டகாலமானவை என்றும் அதனை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.