Ad Widget

வெள்ளை வானில் இராணுவம் கடத்திய மகனின் அழுகுரல் ஈபிடிபி அலுவலகத்தினுள் கேட்டது! தாய் சாட்சியம்.

வெள்ளை வானில் வந்த இரணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றபோது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். எனினும் அங்கிருந்த இராணுவத்தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர் என தாயொருவர் சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் நாள் அமர்வு நேற்று சங்கானைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசி என்ற தாயார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது-

2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்.மாவட்டத்தின் நிலை மிகமோசமாக இருந்தது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக பலரும் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எனது மகன் இராசேந்திரம் நேசராஜ் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். அதற்காக கடவுச்சீட்டை எடுக்கும் நேக்குடன் 2007 ஆம் ஆண்டு மேமாதம் 12ஆம் திகதி அன்று தகப்பனாருடன் பிரதேச செயலகத்திற்குச் சென்று வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயம் முன்பாக வெள்ளை வாகனம் (வாகன இலக்கம் 252- – 3286) மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இடைமறித்தனர்.

இதன்போது திடீரென எனது மகனைத் தாக்கியவர்கள் அவரை வாகனத்துக்குள் இழுத்துச் செல்ல முயன்றனர். அதனைத் தடுக்க முயற்சித்த என்னுடைய கணவரையும் தாக்கினர். வாகனத்தில் கொச்சைத் தமிழில் பேசிக்கொண்டு வந்தவர்களும் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி. யின் உறுப்பினர்களும் எனது மகனை இழுத்துக் கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.

எனது கணவர் வீடு திரும்பி நடந்த விடயத்தை கூறினார். நாம் மானிப்பாயிலுள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றோம். அவர்களிடம் எனது மகன் எங்கே எனக் கேட்டோம். தாங்கள் அவ்வாறு எவரையும் பிடிக்கவில்லை என்றனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்.நகரிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்றோம். அதன் போது எனது மகன் நான் வந்திருப்பதனை எவ்வாறோ அறிந்து உரத்த சத்தத்துடன் அம்மா அம்மா என கத்தினான். நானும் அந்த சத்தம் வந்த திசை நோக்கி கத்திக் கொண்டு சென்ற போது அங்கு நின்ற இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி மிரட்டி அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவத்தை ஈ.பி.டி.பி.யின் பொறுப்பாளரான சில்வேஸ்திரி அலென்ரினிடம் கூறினோம். நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள் உங்கள் மகன் தொடர்பாக பார்ப்போம் என்றார். அந்த வார்த்தையை நம்பி நாங்கள் பல மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்று விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருவோம்.

இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என கருதிய நாம் கொழும்புக்குச் சென்று கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து விடயத்தை தெரிவித்தோம். அதன் போது அவர் உங்கள் மகன் பொலிஸாரூடாக விடுவிக்கப்பட்டு விட்டார் என்று எமக்குப் பதிலளித்தார்.

எனினும் அவர் கூறியதன் பிரகாரம் எமது மகன் வீட்டிற்கு வரவில்லை. என்னுடைய மகனை நான் தேடாத இடம் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னதாக என்னுடைய மகனை கண்டியிலுள்ள வைத்தியசாலையொன்றில் நிற்பதனை ஒருவர் கண்டுள்ளார். எனினும் எனது மகன் இராணுவத்தினருடன் நிற்பதாகவும் அவருக்குக் அருகில் செல்ல முடியாது போனதாகவும் கூறினார்.

ஆகவே, எனது மகன் எங்கோ இருக்கின்றார் என்பது மட்டும் தெளிவாகின்றது. அவர் எங்கிருந்தாலும் என்னிடம் ஒப்படையுங்கள். இதனைத் தான் நான் உங்களிடம் வேண்டுகின்றேன். நான் குறிப்பிட்ட அந்த வாகன இலக்கத்தை வைத்து முதலில் விசாரியுங்கள் அதன்போது பல உண்மைகள் வெளிவரும்.

2007 ஆம் ஆண்டு காலத்தில் ஒருவரின் வாகனத்தை பிறிதொரு நபர் கொண்டு செல்ல முடியாது. எனது மகனை கடத்துவதற்கு வந்த வாகனம் யாருடையது. அதற்கு ஈ.பி.டி.பி.யினர் ஏன் வந்தனர். முதலில் அதனை விசாரணை செய்யுங்கள். எனது மகனை மீட்டுத்தாருங்கள் என மன்றாட்டமாகக் கோரினார்.

Related Posts