வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு த.தே.கூ தலைமை தாங்கும்

appathurai vinayagamoorthyமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்களிளால் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்குவேன்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டின் அரசியல் நிலைமை படுமோசமாக இருக்கின்றது. வெளிநாட்டின் உந்தகம் இல்லாது உள்நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது’ எனவும் சுட்டிக்காட்டினார்.

‘நாட்டில் அரசியல் நிலைமை படுமோசமாக இருக்கின்றது. 1983ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தினை மீண்டும் உருவாக்குவதற்கான செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.

‘யாழில் நடைபெறுகின்ற விடயங்கள் சிங்கள ஊடகங்களுக்கு சென்றடைவதில்லை. அதனால் இங்கு நடப்பவைகள் அங்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை’ என்றும் சுட்டிக்காட்டினார்.

‘வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அத்துடன், விரும்பியோ விரும்பாமலோ ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது’ என்றும் அப்பாத்துறை எம்.பி. குறிப்பிட்டார்.

‘வலி வடக்கு பிரதேசத்தில் 28 ஆயிரத்து 208 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன. அதில் மயிலிட்டி பகுதியில் 5,500 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளார்கள். எதிர்வரும் 13ஆம் திகதி வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றில் ஆதரிக்குமாறு வலியுறுத்தப் போவதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகங்கள் மீதான தாக்குதல் அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்காது. யாழில் இராணுவ சீருடை இல்லாது ஊடகவியலாளர்களாக இராணுவ புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை’ என்றார்.

‘அந்தவகையில், யாழ். மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் தேவை. வேறு விதத்தில் சிவில் நிர்வாகத்தினை கொண்டு வரவேண்டுமென்றும், வெளிநாட்டின் தலையீடு இல்லாமலும் இனி ஒன்றும் நடைபெறப் போவதில்லை’ என்றும் அப்பாத்துரை எம்.பி மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor