வெலிக்கடைச் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதன் அடிப்படையில் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 43க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையை சோதனை செய்ய சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தின் சிறையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி சிறைக்கைதிகளும் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வீச்சு தாக்குதல்களையும் அவர்கள் நடத்தினர்.

வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 13 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும், நான்கு இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவனவும் மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கைதிகளே கலகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த சம்பவத்தின்போது சிறை உடைக்கப்பட்டதாகவும் சிறைக்கைதிகள் தப்பிச்சென்றதாகவும் வெளியான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் மேலும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸாரும் சிறைக்காவலர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன் சடலங்களின் எண்ணிக்கை உயர்வடையலாமென தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தின்போது தானியங்கி துப்பாகிகள் உட்பட 82 துப்பாகிகள் கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்தரசிறி கஜதீர தெரிவித்தார்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது ஒரு சிறைக்காவலர் உள்ளடங்குவதாகவும் 13 பொலிஸார் 4 சிப்பாய்கள் உள்ளடங்களாக 43 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

Recommended For You

About the Author: webadmin