Ad Widget

வீமன்காமம் வதைமுகாம் தடயங்கள் அழிப்பு

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதைமுகாம்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடயங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள் சென்ற போது அருகருகாக உள்ள இரு வீடுகளின் உட்பகுதி கூரை முட்கம்பிகள் கொண்டு வேயப்பட்டு காணப்பட்டது. அதில் ஒரு வீட்டின் ஒரு அறை , இருட்டறையாக பயன்படுத்தப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் , சித்திரவதைக்கு உட்படுத்த பட்டு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்திருந்தன.

குறித்த அறையின் மேற்பகுதி கூரை முட்கம்பிகள் கொண்டு மேயப்பட்டு காணப்பட்டதுடன், அறையின் மேற்பகுதியை சுற்றி வெளி வெளிச்சம் வராதவாறு தகரம் அடிக்கப்பட்டு மறைக்கபட்டு இருந்தன. சுவர்களில் ஆணிகள் அடிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் அறைக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டவில்லை.

அந்த அறையின் கதவில் ” எல்லா தர அதிகாரிகளும் உள் நுழைய முடியாது” என சிங்களத்தில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தன. அத்துடன் அந்த வீட்டின் மற்றும் ஒரு அறை வாசலில் “வெளியாட்கள் உட் செல்ல தடை” என சிங்களத்தில் எழுதப்பட்டு இருந்தது. அந்த அறையின் வாசலில் “எம்.ஐ. ரூம்” என ஆங்கிலத்தில் எழுதபட்டு இருந்தன , எம்.ஐ. என்பது “Military-intelligence ” என்பதாக இருக்கலாம் எனவும் எனவே அந்த அறை இராணுவ புலனாய்வாளர்களின் அறையாக இருந்து இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்து இருந்தன.

இரு வீடுகளுமே இராணுவ புலனாய்வாளர்கள் தங்கி இருந்த வீடுகளாகவும் அந்த வீடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டன.அந்த வீட்டின் மற்றுமொரு அறையில் இராணுவ சீருடைகள் காணப்பட்டன. தற்போது குறித்த இரு வீட்டின் மேல் கூரையில் வேயப்பட்டு இருந்த முட்கம்பிகள் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு உள்ளன. வீட்டின் சுவர்களில் எழுதப்பட்டு இருந்த, சிங்கள எழுத்துக்கள் வர்ணம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வீட்டினுள் காணப்பட்ட இராணுவத்தினரின் உடைகள் மற்றும் இராணுவத்தினரின் ஆவணங்கள் என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டு வீட்டுனுள் காணப்பட்ட இராணுவ தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

இராணுவத்தினருக்கு வதை முகாம்களோ , சித்திரவதை முகாம்களோ நடாத்த வேண்டிய தேவை இல்லை என இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts