விபத்துக்குள்ளான கொழும்பு – யாழ் தனியார் சொகுசு பஸ்கள்! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

accidentகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த SPS Express தனியார் சொகுசுபஸ்கள் இரண்டு புத்தளம் முந்தல் பிரதேசத்தில் இன்று (08.07.2014) அதிகாலை 12.30 மணியளவில் லொறியுடன் மோதிக்கொண்ட வீதி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் 30 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடு இரவில் இடம்பெற்ற இவ்விபத்தில் கைகால்கள் கிழிந்து தொங்கிய நிலையில் பயணிகள் அலறிய சத்தம் வானைப் பிளந்தது.

விபத்துக்கு என்ன காரணம்?

SPS Express என்கிற தனியார் பஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரு சொகுசு பஸ்களும் ஒவ்வொன்றிலும் தலா 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு மொத்தமாக 80 பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டன.

இரு பஸ்ஸின் சாரதிகளும் பயணிகளின் உயிரை கொஞ்சம் கூட மதிக்காமல் ஏட்டிக்குப் போட்டியாக கடும் வேகத்தில் பஸ்ஸை ஓட்டி வந்துள்ளனர்.

புத்தளம் முந்தல் பிரதேசத்தில் வைத்து லொறியுடன் முதல் பஸ் மோதிய போது பின்னால் வந்த இரண்டாவது பஸ்சும் முதல் பஸ்ஸின் பின்னால் மோதியது. பஸ்கள் மோதிய சத்தம் பயங்கரமாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

உள்ளே படு காயம் பட்டு அலறிய பயணிகளை சக பயணிகளும், வீதியால் பயணித்தவர்களும் இணைந்து துரிதமாகச் செயற்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

முழுக்க முழுக்க போட்டி போட்டு ஓடும் பஸ் சாரதிகளின் கவனயீனத்தால் தான் இவ்விபத்து நேர்ந்ததாக பயணிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.

குறித்த பஸ் நிறுவனம் காயம்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பஸ் நிறுவனத்தினர் அடிக்கடி இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக பஸ்ஸை செலுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் இந்த பஸ்ஸில் அடிக்கடி பயணம் செய்யும் வயதான பயணி ஒருவர் குறை கூறினார். இவ்வாறு பயணிகளின் உயிரை மதிக்காமல் ரேஸ் விடும் பஸ் சாரதிகள் மீது போக்குவரத்துப் பொலிஸார் கண்டும் காணாமல் விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor