க.பொ.த. (உயர்தர) பரீட்சை விடைத்தாள் புள்ளியிடும் பணிகள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மேற்பார்வையின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சும் கல்வி அமைச்சும் கூறுகின்ற போதிலும், பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்வரை ஆசிரியர்கள் புள்ளியிடும் கடமையில் ஈடுபட மாட்டார்கள் என ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் புள்ளியிடும் பணியில் ஆசிரியர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் கூறினார்.
பரீட்சகர் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றி புள்ளியிடுதல் சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.
விரிவுரையாளர்களின் மேற்பார்வையின்றி புள்ளியிடுதல் சரியாக, நீதியான முறையில் நடைபெற முடியாது. விரிவுரையாளர்கள் மேற்பார்வை இல்லாதுவிடின் கல்வி முறைமை மாணவர்களுக்கு துரோகம் செய்ததாகிவிடும் என அவர் கூறினார்.
‘உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 30 ஆம் திகதி நிறைவடைந்தது. புள்ளியிடும் வேலை செப்டெம்பர் 3 இல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புள்ளியிடுதல் இன்னும் ஆரம்பிக்கவில்லை. கல்வி தொடர்பான அமைச்சுகளுக்கு மாணவர் நலனில் அக்கறை இருக்குமாயின் பல்கலைக்கழக நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதன்பின் உயர்தர பரீட்சை விடைத்தாள் புள்ளியிடும் பணியை ஆரம்பிக்க முடியும்’ என ஜோஸப் ஸ்டாலின் கூறினார்.