வாகன வரி கட்டுவதாயின் 150 ரூபாவுக்கு புத்தகம் வாங்கவேண்டும் – தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் புதிய விதி!

வாகனங்களுக்குரிய  வருடாந்த வரி கட்டும்போது  வீதி ஒழுங்கு விதிகள் சம்பந்தமாக முன்னாள் போக்குவரத்து பொலிஸ் ஆணையாளர்  பேரின்பநாயகம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்  ஒன்று 150 ரூபா கொடுத்து வாங்கவேண்டும் என  தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கட்டாயநடைமுறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது

ஒவ்வொரு வாகன உரிமையாளரும் இது தொடர்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக நேற்று அங்கு வரிசெலுத்த சென்ற வாகன உரிமையாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

புத்தகத்தை  வாங்குபவர்களுக்கு எந்த வித பற்றுச்சீட்டும் வழங்கப்படுவதுமில்லை எனவும் அவ்வாறல்லாத சந்தர்ப்பத்தில் அரச வருமானமாகவன்றி அது தனிநபர் வருமானமாக இருக்கவே முடியும் எனவும் அவர் விசனம் தெரிவித்தார். அதை விட ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இவ்வாறு புத்தகம் திணிக்கப்படுவதாகவும் வேறு வழியின்றி மக்கள் குறித்த புத்தகத்தினை வாங்கிச்செல்வதாக கூறப்படுகின்றது.

முன்னர் எங்காவது வாங்கியிருப்பின் அது தொடர்பில் எங்கு எப்போ வாங்கினீர்கள் என ஒரு எழுத்துமூலக்கடிதம் சமர்பித்துவிட்டு வாங்காமால் செல்லலாம் எனக்கூறப்படுவதாகவும், அதனால் ஏன் வம்பு என  மக்கள் வாங்கிச்செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது

வடமாகாணசபை போக்குவரத்து ஆணையாளரிடம் இருந்து குறித்த புத்தகத்தினை மக்களுக்கு வழங்குமாறு இதுதொடர்பில் சிபாரிசுக்கடிதம் ஒன்று  பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் அதனால் வருகின்ற விற்பனைப்பணத்தினை வழமையான கணக்கில் வைப்பிலிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.இருப்பினும் கடிதத்தில்  கட்டாயமாக விற்பனைசெய்யவேண்டும்  என அறிவுறுத்தப்படவில்லை எனவும் எனினும் இக்கடிதத்தினை ஆதாரமாக  வைத்து இந்த கட்டாய புத்தக விற்பனை நடைபெறுவதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தக விற்பனையில் அலுவலர்களுக்கு 10 ரூபா தரகுப்பணம் கிடைப்பதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதி ஒழுங்குகள் சம்பந்தமான மேற்படி புத்தகம் மிகவும் பயனுள்ள புத்தகமாக இருக்கின்றபோதிலும் , சிபாரிசு பண்ணாமல் கட்டாயமாக நியாயமற்ற வகையில்  அரச நடைமுறைகளை மீறி விற்பனை செய்வது  மக்களின் இயலாமையில் பணம் பார்க்கும் யுத்தியாக இருக்கின்றது என இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் கூறும்  ஒருமித்த கருத்தாக உள்ளது.

இந்த நடைமுறை குறித்து வேறு சில பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டபோது தாம் கட்டாயமாக புத்தக விற்பனை செய்வதில்லை என தெரிவித்தனர்.

 

Related Posts