வலி.வடக்கில் மீண்டும் வீடுகள் இடித்து அழிப்பு

tellepplai_bundவலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அடங்கும் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது மக்களின் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் இராணுவத்தினரால் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் உள்ளடங்கும் வீடுகள் இந்த வருட ஆரம்பத்தில் இடித்தழிக்கப்பட்டன.

அதை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்தது அதன் பின்னர் இடித்தழிக்கும் நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாகக் கட்டுவன் கெற்றப் போல் சந்தியடிக்கு அண்மையாகவுள்ள வீடுகள் இடித்தழிக்கப்படுகின்றன.

இந்தப் பகுதியிலுள்ள பற்றைகளை வெட்டி அழித்துள்ள படையினர் தற்போது வீடுகளை “புல்டோசர்’ கொண்டு இடிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் அந்தப் பகுதியில் கிளிசீரிடியா (சீமைக்கிழுவை) தாவரத்தையும் நடவுள்ளதாக வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் இடித்தழிக்கப்படும் பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், உறுப்பினர், ஹரிகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.