வலி. கிழக்குப் பிரதேச சபையில் குழப்பம்

வலி.கிழக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது.

valee-east

புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டவர் வெறும் 800 விருப்புகள் மட்டும் பெற்றவர் எனவும், அவரை விட அதிகமாக நவரத்தினம் ரூபராஜ் என்பவர் 2632 விருப்பு வாக்குகள் பெற்றவர் என்றும் அவரைத் தவிசாளாராக நியமித்திருக்க வேண்டும் என உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

21 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் 5 உறுப்பினர்கள், தவிசாளருக்கு ஆதரவாகவும் ஏஞ்சியவர்கள் எதிராகவும் இன்றைய சபை அமர்வில் செயற்பட்டனர். (16 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 5 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்).

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ன அடிப்படையில் புதிய தவிசாளரினை நியமித்தார் என உறுப்பினர்கள் சபையில் குழப்பம் விளைவித்தனர். இதனால் சபையினை தவிசாளர், திகதி குறிப்பிடாமல் சபை அமர்வை ஒத்திவைத்தார்.

மேற்படி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் முன்வைத்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம், இரண்டு தடவைகள் தோல்வியடைந்த பின்னர் அவர் தவிசாளர் பதவியிலிருந்து உள்ளுராட்சிச் சட்டத்திற்கமைவாக நீக்கப்பட்டார்.

தொடர்ந்து, புதிய தவிசாளராக துரைசிங்கம் கணபதிப்பிள்ளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts