வர்த்தகர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவேன். அயூப் உறுதி

Ayub Asminயாழ். மாவட்டத்தில் தென்பகுதி வியாபாரிகளுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும்பொழுது இம்மாவட்ட வர்த்தகர்கள் பாதிப்படையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தினை மாநகர, நகர, பிரதேச சபைகள் கருத்திலெடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அண்மையில் யாழ். வர்த்தகர்களை யாழ்.வர்த்தக சங்கத்தின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். வர்த்தகர்கள், தாம் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளனர் . குறிப்பாக பண்டிகைக் காலத்தில் தென்பகுதி வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து தெருவோரங்களில் பொருட்களைப் பரப்பி வியாபாரம் செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பகலில் மட்டும் தெருவோரங்களில் வாடகையோ, வரியோ, மின்கட்டணங்களோ எதுவுமே செலுத்தாமல் வியாபாரம் செய்வோரால் உள்ளூர் வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் பல வியாபாரிகள் பாதிப்படைவதுடன் தொழில்களையே கைவிடுகின்ற நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர் அயூப் இதற்குப் பதிலளிக்கையில்,

உள்ளூர் வியாபாரிகள் முடிந்தளவிற்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பகுதியிலிருந்து பருவகால வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அனுமதிகளை வழங்கும் பொழுது இம்மாவட்ட வியாபாரிகளும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சருடன் தொடர்புகொண்டு இதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ். வர்த்தகர்களிடம் உறுதியளித்துள்ளார்.