பம்பலபிடி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் முஹமட் ஷாகிப் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது.
நேற்று அவரது சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி மரணத்துக்குக் காரணம் தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால் உடலின் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமையே என தெரியவந்துள்ளது.
மேலும், அவர் கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் வரையான காலப் பகுதியில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, இரவு 11.15 அளவில் மனைவிக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவரது மனைவி வீட்டைத் திறந்து வௌியே வந்த போது, சுலைமானது கைக்கடிகாரம் மற்றும் அவர் கொண்டு வந்த உணவுப் பொதியும் நிலத்தில் கிடந்ததாக, பம்பலபிடிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த சிலரே கணவரைக் கடத்தியிருக்கலாம் எனவும் அவரைத் தேடித் தருமாறும், சுலைமானின் மனைவி அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரொருவரின் பழுதடைந்த நிலையிலான சடலம், மாவனெல்ல பகுதியில் இருந்து மீட்கப்பட்டதோடு, அது காணாமல் போன வர்த்தகருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு பின்னர் கொழும்பில் இருந்து பொலிஸ் குழுவும், வர்த்தகர் சுலைமானது தந்தை உள்ளிட்ட உறவினர்களும் அப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, சடலத்தில் இருந்த சில அடையாளங்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு அது தனது மகன் என அவது தந்தை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கைப்பற்றப்பட்ட சடலம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.