Ad Widget

வட மாகாண வைத்தியசாலைகளில் அதிகளவான தாதியர் வெற்றிடங்கள்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள 05 மாவட்ட வைத்தியசாலைகளின் சேவைக்கு 826 தாதியர்கள் தேவை காணப்படுகின்ற போதிலும், 692 பேர் மாத்திரமே பணியாற்றி வருவதாக மாகாண சுகாதார திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளின் சேவைக்கு 826 தாதியர்களுக்கான நியமனங்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது 692 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் பணியாற்றுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பணிபுரிபவர்களில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான 122 தாதியர்களில் தற்போது 90 பேர் மாத்திரமே பணி புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிக்கு 90 தாதியர்கள் தேவைப்படுகின்ற நிலையில் தற்போது 85 தாதியர்கள் மாத்திரம் பணி புரிகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் பொது வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளின் பணிக்காக 32 தாதியர்கள் தேவையான நிலையில் தற்போது 5 தாதியர்கள் மாத்திரம் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 112 தாதியர்கள் தேவைப்படும் நிலையில் 87 பேர் மாத்திரமே தற்போது பணியாற்றுகின்றனர். அத்துடன் இந்த மாவட்டத்தின் பொது வைத்தியசாலையின் பணிக்கு 66 தாதியர்களுக்கு பதிலாக 62 தாதியர்களே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் குறித்த மாவட்டத்தில் பொது வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளின் தேவைக்கு 46 பேர் தேவையாக உள்ளபோதும் 21 பேர் மாத்திரமே பணி புரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வவுனியா மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 218 பேர் தேவைப்படுகின்ற நிலையில் 212 தாதியர்கள் மாத்திரம் பணிபுரிந்து வருவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

அதுமாத்திரமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிகளுக்காக 128 தாதியர்களுக்கு தேவை உள்ள நிலையில் 109 மாத்திரமே பணி புரிந்து வருகின்றனர்.

இதேவேளை, யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளின் பணிக்கு மாத்திரம் 246 தாதியர்கள் தேவைப்படும் பட்சத்தில் 194 தாதியர்கள் மாத்திரமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மொத்தமாக 826 தாதியர்கள் தேவையாகவுள்ளனர். இதில் 2015ஆம் ஆண்டு நிறைவின் தகவலின் பிரகாரம் 692 பேர் பணியாற்றுகின்றனர்.

கடந்த கால யுத்தத்தின் பின்னர் வடக்கின் சகல மாவட்டத்திலும் வைத்தியர்கள் மட்டுமின்றி தாதியர்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியது.

இருப்பினும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே தாதியர் பற்றாக்குறை அதிகமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனிசமான வெற்றிடங்கள் நிலவுகின்றபோதிலும் வவுனியா மாவட்டத்தின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தேவை குறிப்பிட்ட அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலை போதனா வைத்தியசாலை என்பதன் அடிப்படையில் குறித்த வைத்தியசாலை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் தாதியா்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts