ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தல் , வடக்கு மாகாண சபை , தற்போது நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என்றும் மனோ கணேசன் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உறுதியான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என்றும் முடிவுகள் எடுக்கும் போது வடக்கு மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கட்சித் தலைமை முன்னுரிமை வழங்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதலமைச்சராக ஜனாதிபதி முன்னால் பதவிப்பிரமாணம் செய்தபோது தனக்கு வாக்களித்த மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளதாகவும் நல்லெண்ணத்துடனேயே தான் ஜனாதிபதி முன் பிரமாணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு செயற்பட்டும் அரசு அதனை சரியான முறையில் செய்யவில்லை. ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகள் எவையும் வடக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை.
எனவே இவர்களுடைய இவ்வாறான செயற்பாடுகள் அரசின் போலி முகத்தை நன்கு எடுத்துக் காட்டுகின்றது எனவும் வடக்கு முதலமைச்சர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 8 மாகாண சபையில் இருக்கும் முதலமைச்சர்களை விட வடக்கு மாகாண முதலமைச்சராகிய தானக்கு சவால்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே சேவையாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் , உண்மையான தேசிய ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும் கொள்கையை தமது கட்சி ஏற்கனவே முன்னெடுக்கின்றது.
இதற்கு மேலதிகமாக வடமாகாணசபை எதிர்கொள்ளும் திட்டமிட்ட தடைகளை, தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மூலமாக, சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறும் ஒரு பொறிமுறையை முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து தமது கட்சி உருவாக்கும் எனவும் மனோ கணேசன் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.