வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பனிப்போர் என்ற செய்தியில் உண்மையில்லை! – கமலேந்திரன்

kamal_epdpபதவியேற்கப்போகும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக பனிப்போர் நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும், இது வழமை போல் புனையப்பட்டு சோடிக்கப்பட்டிருக்கும் பொய்த்தகவல் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தேர்தல் என்பது எமது கட்சியின் இலக்கு அல்ல. தேர்தல் மூலம் பதவி நாற்காலியை மட்டும் எட்டிப்பிடிப்பது எமது விருப்பமும் அல்ல. எமது அரசியல் இலக்கு நோக்கிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் தேர்தலும் ஒன்று என்பதே உண்மை.

தேர்தலின் மூலம் அரசியல் அதிகாரங்களை பெறுவதன் ஊடாகவே நாம் இது வரை அரசியல் தீர்வை நோக்கியும், அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார வசதிகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதிலும் வெற்றியின் திசை நோக்கி நடந்து வந்திருக்கிறோம்.

மாகாண சபை அதிகாரம் என்பது அரை குறை தீர்வு என்றும், உழுத்துப்போனது என்றும் சக தமிழ் கட்சி தலைமைகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், நாம் மட்டுமே மாகாண சபையில் இருந்து தொடங்கி எமது அரசியல் இலக்கு நோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள்.

ஆகவே தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், மாகாண சபையை மறுபடியும் எமது மக்களுக்கு உருவாக்கி கொடுத்ததன் வெற்றி எமது கட்சியையும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களையுமே சாரும்.

இத்தகையை அரசியல் வெற்றியை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கும் எம்மை கொச்சைப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யான செய்திகளை நாம் வெறுக்கின்றோம்.

எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விகளையோ அன்றி அது குறித்த கோரிக்கைகளையோ எமது கட்சி சார்பாக இது வரை நாம் எவரிடமும் விடுத்ததில்லை.

எமது இலக்கும், எண்ணமும் மாகாண சபை யார் கையில் இருந்தாலும் அது எமது மக்களின் எதிர்கால இலட்சியத்தை நோக்கி வழி நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

எதிர்க்கட்சி என்றால், ஆளும் கட்சி எதை செய்தாலும் சரி, தவறு பார்க்காமல் எதிர்க்கும் அருவருப்பான உண்மைகளே இதுவரை இங்கு நடந்தேறி வந்திருக்கின்றன.

இத்தகைய கசப்பான நிகழ்வுகள் இனியும் இங்கு நடக்க நாம் அனுமதியோம். வட மாகாண சபை எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது நாம் அதை எதிர்க்கட்சியாக இருப்பினும் ஆதரித்து வரவேற்போம். தவறுகள் நடந்தால் மட்டும் தட்டிக்கேட்போம்.

இதையே எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் கட்டளையாக எமக்கு பிறப்பித்துள்ளார் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான கந்தசாமி கமலேந்திரன் கமல் அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.