வட மாகாணத்துடன் இணைந்து செயற்படுமாறு அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு தேர்தல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ஸாகியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை வருமாறு:

இலங்கையில் மூன்று மாகாணங்களில் செப்டெம்பர் 21ம் திகதியன்று நடத்தப்பட்ட வெற்றிகரமான தேர்தல்களையிட்டு ஐக்கிய அமெரிக்கா இலங்கை மக்களைப் பாராட்டுகின்றது. பலதசாப்த கால சிவில் யுத்தம் 2009ம் ஆண்டில் முடிவிற்கு வந்ததன் பின்னர் வட மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருந்தது.

தமது விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாகாண சபைகளை மக்கள் தற்போது தெரிவுசெய்துள்ள நிலையில் மாகாணங்களின் புதிய சிவில் தலைமைத்துவத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதனூடாக பெருமெடுப்பிலான நல்லிணக்கத்தை விஸ்தரிப்பதற்கான முயற்சிகளுக்கு குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாம் கோருகின்றோம்.