Ad Widget

வட மாகாணசபை அமர்வில் நடந்தது என்ன?

வடமாகாணசபையின் 37வது அமர்வு நேற்று பெரும் அமளி துமளிகளுடன் நடைபெற்று முடிந்தது. இந்தஅமர்வில் 10 பிரேரணைகளும், 2 வாய்மொழி மூல கேள்விகளும் கேட்கப்பட்டு 10 பிரேரணைகளில் 9 பிரேரணைகள் சபையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றுக்காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5 மணி வரையில் நடைபெற்றிருந்தது.இந்த அமர்வில் முல்லைத்தீவு காடழிப்பு, மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் தொடர்பான விவாதங்கள் நடந்தன.

முல்லைத்தீவு காடழிப்பு

முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்பாக அந்த மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றிணை முன்மொழிந்திருந்தார்.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவு எல்லைக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் சுமார் 600 ஏக்கர் வரையிலான காடுகள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் தமக்கு தெரியாது என கூறியிருக்கும் நிலையில் வடமாகாண காணி அமைச்சரும், முதலமைச்சருமா ன சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். என குறித்த பிரேரணையில் ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் மாவட்டச் செயலகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறித்த காடழிப்பு தொடர்பாக அரசாங்க அதிபர் தனக்கு தெரியாது என்றால் 2616 சதுர கிலோமீற்றர் கொண்ட மாவட்டத்தை எப்படி நிர்வகிப்பார்கள் என கேள்வி எழுப்பியதுடன், எங்களுடைய மக்கள் சாதாரணமாக ஒரு தடி வெட்ட முடியாத நிலையில் உள்ள போது, சுடுகாட்டில் சடலம் எரிப்பதற்கு மரம் இல்லாமல் இருக்கும் போது, வேலிக்கு போட்ட கட்டைகளை கொண்டு சென்றவருக்கு 10ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படும் நிலையில் 600 ஏக்கர் காடு எப்படி வெட்டப்பட்டது, என கேள்வி எழுப்பியதுடன் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு நாம் தடைவிதிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் முறையாக மீள்குடியேறவேண்டும். என சபையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து மற்றய ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்களும் இநத விடயத்தில் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக பதிலளிக்கையில் எங்களுடைய மக்கள் தங்கள் காணிகளையே துப்புரவு செய்தனர். ஆனால் அங்கு பற்றைகள் வளர்ந்திருந்தன, அவற்றை வெட்டும் போது மரங்கள் சில வெட்டப்பட்டிருக்கலாம். என காடழிப்பு விடயத்தை அப்படியே பூசி மெழுகினார்.

தொடர்ந்தும் இந்த பிரச்சினை பேசப்பட்டு வந்த நிலையில் குறித்த விடயம் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் பிளவை உண்டாக்கும் என்ற அடிப்படையில் இந்த விடயம் தொடர்பாக பேசிய முதலமைச்சர், மேற்படி காடழிப்பு தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளதாகவும். அதனடிப்படையில் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அடுத்த அமர்வில் பேசலாம் எனவும் கூறினார். இந்நிலையில் குறித்த பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விதவைகள், வலுவிழந்தவர்கள், அநாதை சிறுவர்களுக்கு உதவுவது தொடர்பாக.

வடமாகாண சபைக்கான தேர்தல் கடந்த 21.09.2013ம் திகதி நடைபெற்றிருந்த நிலையில் குறித்த தேர்தலுக்கு 10 தினங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சு மற்றும் 4 திணைக்களங்களிடமிருந்த சுமார் 11 கோடியே 62 லட்சத்து 92,560 ரூபா நிதி முன்னைய ஆளுநரினால் ஆளுனர் தற்துணிவு நிதியத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த நிதியை மாகாண பொதுகணக்குகள் குழு கண்டறிந்துள்ளதுடன், அந்த நிதியை அமைச்சு மற்றும் மேற்படி 4 திணைக்களுக்கும் வழங்கும் படியும் அதற்கான வட்டியையும் அதனுடன் சேர்த்து வழங்கும்படியும் கேட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிதியை மாகாணத்திலுள்ள விதவைகள் மற்றும், அநாதை சிறுவர்கள், வலுவிழந்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்துமாறு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சபையில் முன்மொழிந்திருந்தார். இந்நிலையில் நிதியை எவ்வாறு செலவிடவேண்டும். என அமைச்சர் வாரியம் தீர்மானிக்கும் அவைத்தலைவர் கூற முடியாது என சபையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக உறுப்பினர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்ச்சியாக பகிரப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒருவாறாக அவைத்தலைவரின் சிபார்சு சபையில் ஒத்துக்கொள்ளப்பட்டது.

அரசியல் கைதிகள் தொடர்பாக

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனயீர்ப்பு மசோதா ஒன்றினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் சபையில் முன்வைத்தார்.அவர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக காலத்தின் தேவையறிந்து விசேட பிரேரணையொன்றை இந்த உயரிய சபையில் முன்மொழிய விளைகின்றேன். 2009ல் யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டபோதும் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகள் பலவும் இதுவரை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

இவற்றுள் நீண்டகாலமாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையானது அவசரமானதும், அவசியமானதுமான பிரச்சினையாகும்.பொதுவாக நாடுகளில் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று அவை பேச்சுவார்த்தை மூலமோ அன்றி போரின் மூலமோ முடிவடைந்த நிலையில், அரசியல் கிளர்ச்சியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்வது உலகமரபாகும். எனினும் எமது நாட்டில் நடைபெற்ற தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டத்தின் பின்னர் இவ்வாறான நடைமுறை பினபற்றப்படவில்லை. குறிப்பாக 1970 மற்றும் 80 களில் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அதில் ஈடுபட்டவர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இவ்வாறான நடைமுறை தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. 2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னரும் அதன்பின்னரும் விடுதலை போராட்டத்திற்கு உதவினார்கள் அல்லது அதில் நேரடியாக ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்ட்டவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று வகையினர் அடங்குகின்றனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசரணைகள் எதுவுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர். வழக்குத் தாக்கல் செய்யப்பட்டும் தீர்ப்புகள் இதுவரை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குற்றமிழைத்தவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர். தற்போது ஆயுதப் போராட்டம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் உருவாவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அரசாங்கம் கூறிவரும் நிலையில் இவ்வாறாக தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதானது, எந்தவகையிலும் நியாயமாகாது. குறிப்பாக போரிற்கு பின்னரான சூழ்நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவர்களின் மனைவி, பிள்ளைகள் துணையேதுமின்றி , வருமானமின்றி அன்றாட வாழ்க்கையையும் பிள்ளைகளின் கல்வியையும் கொண்டு செல்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கடந்த சனவரியில் இலங்கையில் புதிய அரசொன்று அமைக்கப்படுவதற்கு பிரதான காரண கர்த்தாக்களாக இருந்த தமிழ் மக்கள் புதிய ஆட்சியில் தமக்கான அரசியல் விமோசனம் கிட்டுமென்ற நம்பிக்கையிலேயே பெருவாரியான வாக்குகளை நல்லாட்சி அரசுக்கு வழங்கியிருந்தனர். இந்தநிலையில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரியாசனத்தில் அமர்ந்த புதிய நல்லாட்சி அரசானது ஆகக்குறைந்தது இவ்வாறாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் எதுவுமின்றி, பொதுமன்னிப்பை வழங்கி உடனடியாக விடுதலை செய்து தனது நல்லிணக்க சமிஞ்சையை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இதன்மூலம்தான் தென்னிலங்கை அரசின் மீது நம்பிக்கையிழந்த தமிழ் சமூகத்திற்கு புதிய நல்லாட்சி அரசில் நம்பிக்கை ஏற்பட வாய்ப்பு ஏற்படுவதுடன் அரசியல் தீர்வை நோக்கிய நீண்ட பயணத்திற்கான அத்திவாரமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை. இந்த உயரிய மக்கள் சபையினூடாக இந்த பிரேரணையை தயவுடன் முன்வைப்பதோடு சபையினரின் ஆதரவை கோரி நிற்கின்றேன்.என்று குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக,

37வது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது பதிலளித்த முதலமைச்சர் அனைத்து விடயங்களும் நாங்கள் வருவதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் இலங்கையில் மாகாணசபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் மற்றைய மாகாணங்களில் வழங்கப்படும் கொடுப்பனவுகளை காட்டிலும் வடமாகாண சபையில் கொடுப்பனவுகள் மிகவும் குறைவு என்பதை சுட்டிக்காட்டினார். அதேபோன்று உறுப்பினர்கள் தமக்கான சம்பளங்கள் போதாது எனவும், அமைச்சர்கள் தமக்கான பெற்றோல் கொடுப்பனவுகள் போதாது எனவும் சபையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Related Posts