வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகமோசமான அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஸ்ரீதரன் எம்.பி.யினால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட்டதாகவும் வடக்கு கிழக்கில் ஒரு சுமுகநிலை நிலவுவதாகவும் கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சொல்லி வருகின்றது. ஆனால், அதற்கு மாறான நிகழ்வுகளே தமிழர் வாழுகின்ற பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றது. இன்று வடக்கு கிழக்கில் மிகமோசமான அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவருகின்றது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தல்களின் மூலம் தமிழர்கள், அரசாங்கத்திற்கு மிகத்தெளிவாக ஒரு செய்தியினைச் சொல்லி இருக்கின்றார்கள்.
அதாவது, தமிழர்கள் தமது அபிலாசைகளை முழுமையாக தமிழ்த் தேசியத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ததன் மூலம் தமது அடிமனதிலுள்ள தேவைப்பாட்டை அடித்துரைத்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த மக்களின் ஜனநாயக தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கம் போர்க் காலத்தில் இருந்தது போலவே ஒரு இராணுவ ஆட்சியையே வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கடந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் தமது உச்சகட்ட ஜனநாயக தீர்ப்பை எழுதிய பின்பும் அரசாங்கம் தனது தான்தோன்றித்தனமான செயல்களிலேயே ஈடுபட்டுவருகின்றது.
வடமாகாண சபையின் நிர்வாகங்களில் இராணுவம் தலையிட்டுவருகின்றது. இதன் காரணமாக தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மதிப்பற்றவர்களாக அவமதிக்கப்படுகின்றார்கள்.
அண்மைக்காலமாக இராணுவத்தால் செய்யப்பட்டுவரும் சுற்றிவளைப்புகள் கைதுகள் என்பவற்றுக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள வீடு இராணுவத்தால் நேற்று புதன்கிழமை (28) அதிகாலை முதல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எனத்தெரிந்தும் அவரின் அடிப்படை உரிமைகள் இராணுவத்தால் மீறப்பட்டிருகின்றது. இதுபோல அமைச்சர் ஜங்கரநேசனுக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்தநிலை என்றால் சாதாரண தமிழ் குடிமக்களுக்கு என்ன இங்கு நேர்கின்றது என்பதை சர்வதேசம் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையான சூழல் தமிழர் வாழும் பகுதிகளில் தற்போது நிலவுகின்றது.
முழுமையான ஜனநாயக மறுப்புச் சூழலுக்குள் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கை இராணுவம் உட்படுத்தி வருகின்றது. இது கண்டனத்திற்குரியது. தமிழர்கள் தற்போது முழுமையாக தமது நிம்மதியை இழந்திருக்கின்றார்கள். அவர்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் வீடுகள் சுற்றிவளைக்கப்படலாம் எவரும் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
வடக்கு கிழக்கு முழுமையான இராணுவ மயமாக்கலுக்குள் சென்றுகொண்டிருப்பதை சர்வதேச சமுகம் கவனத்தில் எடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழர்கள் உரிமைகளுடன் கூடிய அமைதியான சுதந்திரமான வாழ்வு வாழ வழி அமைக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.