வட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கென இராணுவத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று தமக்குரிய பாடநேரங்கள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.

இராணுவத்தினரை பாடசாலைகளில் கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை என்ன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.பாடசாலைகளையும் இராணுவ மயமாக்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே தாங்கள் இதனை நோக்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசி தமிழோசையிடம் கூறியிருந்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிக்க வேண்டிய தேவை இருந்தால் அதற்கான ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்கி, அவர்களுக்கு உரிய நியமனம் வழங்கி அதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறில்லாமல் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியைப் பாடசாலைகளில் கற்பிக்க முற்படுவது முறையற்றது என்றும் இதனைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசியிடம் தெரிவித்தார்.இலங்கை ஆசிரியர் சேவையின் யாப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் மூலமாகக் கோரியிருக்கின்றது.

இராணுவம் மறுப்பு

இதேவேளை இராணுவ சீருடை அணிந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் கிளிநொச்சி பாடசாலைகளில் சிங்களம் கறிபிக்கத் தொடங்கியுள்ளனர் எனும் குற்றச்சாட்டை இராணுவம் நேற்று மறுத்துள்ளது.’கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலய கல்வி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி, படையினரிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டு இந்த பாடங்களை தமிழில் கற்பிக்கக்கூடியவர்களை இனங்கண்டார். இந்நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் முறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் இப்போது கற்பித்தலுக்கு தயாராக உள்ளனர்.

ஆனால், எவரும் சீருடையில் கற்பிக்க மாட்டார்கள். இவர்கள் சிவில் உடையில் கற்பிக்க பணிக்கப்படுவர்’ என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். ‘உரிய அதிகாரிகளின் வேண்டுதலின் அடிப்படையில் மட்டுமே இது நடைபெறும். ஆனால், இதுகூட உரிய அதிகாரிகள் கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடுதான்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘நல்லெண்ணத்துடனான எமது செயற்பாட்டை சுயநல நோக்கமுள்ள சிலர் இராணுவம் இதை வற்புறுத்தி செய்வதாக சித்தரிக்கின்றனர். இது பிழையானது. அடிப்படையற்றது’ என அவர் மேலும் கூறினார்

இதனிடையே வன்னி தீவகம் போன்ற கஷ்டப்பிரதேசங்களில் நியமனம் பெறும் தமிழ் ஆசிரியர்களில் பலர் இங்கு பணியாற்ற மறுப்பு தெரிவிக்கின்றமையும் அவர்கள் இடமாற்றம் கோருவதன் பின்னணியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது இராணுவத்தினரை ஈடுபடுத்தவதற்கு காரணமாக நியமனம்பெறும் ஆசிரியர்களின் பின்னடிப்பே எனக்கூறி திட்டமிட்ட இராணுவத்திணிப்பினை சில சிங்கள இனவாத சக்திகள் முன்னெடுக்க வழி சமைத்துள்ளதாக கல்விப்புல அவதானிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து நாமும் சிந்திக்கவேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை அதற்காக இச்செயற்பாட்டினை நியாயப்படுத்தமுடியாது என்றும் அரசு வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு தகுந்த வசதிகளை அங்கு ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் அங்கு பணியாற்ற முடியும் எனவும் தெரிவித்தனர்.