வடமாகாண நீரியல் ஆய்வுமையம் தொண்டைமானாறில் திறந்து வைப்பு

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறில் வடமாகாண நீரியல் ஆய்வுமையம் (NORTHERN PROVINCIAL HYDRO LOGICAL RESEARCH CENTER)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகாமையில் தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த நீரியல் ஆய்வுமையத்தை வடக்கின் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை (15.10.2014) சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்துள்ளார்.
வடக்கின் நீர்வள இருப்பின் மதிப்பீடு, நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், சிக்கன நீர்ப்பயன்பாடு, நீரின் தரம், கடல்நீரைக் குடிநீராக்கல், மாசகற்றல் போன்ற தண்ணீருடன் தொடர்பான பல்வேறு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள் தங்கள் கிணற்றுக் குடிநீரின் தரம்பற்றிக் குறைந்த செலவில் மதிப்பீடு செய்து கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு இந்த ஆய்வு மையத்துக்கு முதற்கட்டமாக 5 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டிலும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு ஆய்வுமையத்தின் தரம் மேலுயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண நீரியல் ஆய்வு மையத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனோடு விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் சோ.சண்முகானந்தன், ந.சுதாகரன், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடன் பெருமளவிலான பிரதேசவாசிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆய்வுமையத் திறப்பு விழாவின் இறுதியில் தொண்டைமானாறு மற்றும் அச்சுவேலிப் பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 104 பேருக்கு கோழிவளர்ப்புக்கென தலா 20 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

01   04

03   02

08   12

17   15