வடமராட்சியில் “கள்” உற்பத்தியை குறைத்து பதனீரை உற்பத்தி செய்ய நடவடிக்கை

Kallu- thavaranaiயாழ்ப்பாணம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் மதுவை ஒழிக்கும் நோக்கமாக பனை மரத்திலிருந்து பதனீர் இறக்குவோருக்கு கூடிய சந்தர்ப்பம் வழங்கவுள்ளது.

முதற்கட்டமாக வல்லிபுரம் குறிச்சிக் கிராமத்தில் 3 குழுக்களை தெரிவு செய்து அக்குழுக்கள் உற்பத்தி செய்த பதனீரை காய்ச்சி அதனை கருப்பட்டி ஆக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

பனம் பாணியை உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு போத்தல் 400 ரூபாய்படி தரமான பனம்பாணியை கொள்வனவு செய்து அவற்றினை பின்னர் விஞ்ஞான முறைப்படி கருப்பட்டியாக்கி விற்பனை செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு குழுவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு 3 ஆயிரம் ரூபாவும் பனம்பாணி கொள்வனவுக்கு 10 ஆயிரம் ரூபாவும் முற்பணமாக வழங்கி அவர்களிடமிருந்து கருப்பட்டியை கொள்வனவு செய்து அதனை சந்தைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் பனையிலிருந்து கள்ளை இறக்கி மதுபாவனையை குறைத்து கருப்பட்டி உற்பத்தியை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போரூட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.மரிக்கர் நேற்று முன்தினம் நிறுவனத்துக்கு வருகை தந்து இந்தச் செயற்பாட்டை பார்வையிட்டார்.

அதன் பின்னர் 30 குழுக்களுக்கு முதற்கட்ட உதவியாக 4 இலட்சம் ரூபா வழங்குவதற்கு முன்வந்துள்ளார். அவருடைய முக்கிய நோக்கம் யாழ்.குடாநாட்டில் கள் உற்பத்தியை குறைத்து தேவையான கருப்பட்டியை உற்பத்தி செய்வதே என குறிப்பிடப்படுகிறது.