வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களுக்கான அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை!

north-provincial-vadakku-npcவடக்கு மாகாண சபையால் சமர்ப்பிக்கப்பட்ட நியதிச் சட்டங்களுக்கான அங்கீகாரம் ஆளுநரினால் இன்னமும் வழங்கப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையே அதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதனால் வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வி லும் நியதிச் சட்டம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையால், நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம், முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் என்பன வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதிக்காகக் கடந்த மாதம் 6 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் பின்னர் நியதிச் சட்டம் தொடர்பிலான விவாதத்திற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த அமர்வுக்கு முன்னதாக ஆளுநரிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதையடுத்து இரு வாரகால அவகாசம் வழங்கிய வடக்கு மாகாண சபை மீளவும் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அந்த அமர்வுக்கு முன்னதாகவும் ஆளுநரின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாணசபையின் அமர்விலும் நியதிச் சட்டம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையால் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நியதிச் சட்டம், சட்ட வரையறைக்கு உட்பட்டதா என்பதை ஆராய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரையில் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அதனால் ஆளுநரின் அங்கீரம் கிடைக்கவில்லை என்றும், மாகாண சபையின் அடுத்த அமர்வில் நியதிச் சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறப்படுகின்றது.