Ad Widget

வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

KN-daklasஅண்மையில் வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றதையிட்டு தான் பெறுமையடைவதாகவும் இப்பரீட்சையில் வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்து பெறுமைசேர்த்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

‘கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து 16,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில், 63.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்று, இலங்கையின் 9 மாகாணங்களிலும் வடக்கு மாகாணத்தை முதலிடத்துக்கு உயர்த்தியுள்ளனர் என்பதை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியில் ஒரு காலத்தில் வடக்கு மாகாணம் பெற்றிருந்த உயர்நிலையை மீண்டும் இந்த மாணவர்கள் பெற்றுத் தந்துள்ளமையை நினைத்து நான் பெருமையுடன் பாராட்டுகிறேன்.

யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த எமது கல்வித்துறையை இவ்வாறு தூக்கி நிறுத்தியதுபோல், ஏனைய விடயங்களிலும் வடக்கு மாகாணத்தைத் தூக்கி நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களின் இந்த முன்னேற்றம் சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கைவாழ் தமிழர்கள் எதிர்கொண்டிருந்த பாகுபாடுகள் மற்றும் பல்வேறு இன்னல்கள் கண்டு கொதித்தெழுந்து, அந்நிலையிலிருந்து எமது மக்களை மீட்டு அம்மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஆரம்பகால இளைஞர்களில் நானும் ஒருவன்.

இவ்வாறு நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அதன் நோக்கத்தை மறந்து ஆயுத மோகமும் அதிகார வெறியும் கொண்டதாக தடம்மாறிப் பயணித்ததன் விளைவாக, எந்த மக்களின் விடிவுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த மக்களுக்கே அழிவைத் தேடித்தந்த ஒன்றாக பின்னாளில் மாறிவிட்டதால், தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் வன்முறைச் சூழல் பரவி, ஆயிரக்கணக்கான மக்களும் அவர்தம் சொத்துக்களும் அழியும் நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாது, போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்ததை விடவும், கல்வி உட்பட அனைத்து துறைசார்ந்தும், பொருளாதாரத்திலும் எமது தாயகப் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தன.

சுயலாப தமிழ் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆயுதப் போராட்டத்தின் தவறான செயற்பாடுகளின் விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்தவனாக, உரிய காலத்தில் நடைமுறை சாத்தியமான மாற்று வழிகளைக் கைக்கொண்டு மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஜனநாயக வழிக்குத் திரும்பி, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சாத்தியமான அணுகுமுறைகள் மூலம் அயராது உழைத்து வருகிறேன்.

அழிவு யுத்தத்தினால் எமது பிரதேசம் மென்மேலும் அழிவுகளையே சந்தித்து, கல்வி உட்பட பொருளாதாரத்திலும் இலங்கையின் 9 மாகாணங்களிலும் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனாலும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், முழு மூச்சுடன் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றி, அழிவுண்ட பிரதேசங்களை அபிவிருத்தியால் தூக்கிநிறுத்தும் பணியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாங்கள் முன்னெடுத்து, 2013 வரையான நான்கு வருட காலப் பகுதிக்குள் வடக்கை பெருமளவு முன்னேற்றகரமான நிலைமைக்குக் கொண்டு வந்தோம்.

இந்தப் பணிகளில் குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பல மில்லியன் ரூபா செலவில் பாடசாலைகள் புனரமைப்பு, உட்கட்டுமான வசதி மேம்பாடு, ஆசிரிய வள மேம்பாடு, மாணவர்களுக்கான கற்கைச் சூழல் அபிவிருத்தி என ஏராளமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு, கல்வித்துறையில் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு ஏதுவான சூழல் இங்கே ஏற்படுத்தப்பட்டது.

இந்த அயராத உழைப்பின் பயனை இன்று வடக்கு மாகாணம், அதன் மாணவர்களின் அதியுயர் கல்வித் தேர்ச்சியின் மூலம் அனுபவித்து பெருமிதம் கொண்டுள்ளது.

இந்த நிலைக்கு எமது கல்வித்தரம் உயர்வதற்காக அளப்பெரும் பங்களிப்பை ஆற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பாக நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், வடக்கு மாகாணசபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிராத நிலையிலும், தனியொரு மனிதனாக நின்று வடக்கு மாகாணத்தின் கல்வித்துறை உயர்ச்சிக்காக அயராது உழைத்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அவருக்கு உறுதுணையாக நின்றுழைத்த மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண, வலய மற்றும் கோட்ட மட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், துறைசார் கல்வி ஆலோசகர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனியே இந்தத் தருணத்தில் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, போருக்குப் பிந்திய சூழலில், போரின் வடுக்களைச் சுமந்தவாறும், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்ததன் மூலம், மீண்டும் எமது பிரதேசத்தை கல்வியில் உயர்ந்த நிலையில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த மாணவச் செல்வங்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்றே, காலத்தையும், கிடைக்கின்ற வாய்ப்புக்களையும் சரியாகப் பயன்படுத்தி இந்த மாணவச் செல்வங்கள் தொடர்ந்தும் கல்வியில் உயர்ந்து எமது பிரதேசத்தை ஏனைய எல்லா நிலைகளிலும் மேலுயர்த்த கைகொடுக்கவேண்டும். அத்துடன் இந்த நாட்டின் சிறந்த பிரஜைகளாக, எமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய நிலையில் சிறந்த அறிஞர்களாக, துறைசார் நிபுணர்களாக உயர் நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

போருக்குப் பிந்திய இந்த 4 வருடங்களில், வடக்கு மாகாணசபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகாத நிலையிலும், ஆளுநர் மற்றும் மாகாணசபை செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டோரின் கடின உழைப்பால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையை, தற்போது தேர்தல் மூலம் மாகாணசபை நிர்வாகத்தைக் கைப்பற்றியிருக்கும் பிரதிநிதிகள் உரிய முறையில் தொடர்ந்தும் பேணி எமது இளைஞர்களுக்கும், எதிர்கால சந்ததிக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்த அயராது பாடுபடவேண்டும் என்றும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நான் அழைப்பு விடுக்கிறேன்.

வாக்கு வேட்டைக்காக மீண்டும் உணர்ச்சி தூண்டும் அரசியல் செய்து எமது இளைஞர்களை அழிவுப்பாதையில் தள்ளிவிடாமல், இதுகாலவரையான எமது கடின உழைப்பின் மூலம் எட்டப்பட்ட இந்த நிலைமையை இளைஞர்கள் தொடர்ந்தும் அனுபவித்து, வாழ்வில் உயர்நிலை அடைய கைகொடுக்கவேண்டும் என்றும் மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts