Ad Widget

வடக்கு மாகாணசபையில் நேற்று கடும் வாய்த்தர்க்கம்!!

வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ரெலோ ஆகிய கட்சித் தலைமைகளின் கடந்தகால வண்டவாளங்கள் உறுப்பினர்களால் பரஸ்பராமாக உறுப்பினர்களால் சபையில் பலர் முன்நிலையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று இடம்பெற்றது. மீன்பிடி அமைச்சின் மீதான இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் – முதலமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் திரிகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு மாகாண சபை ஊழல் புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இதன் போது, அவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை பயன்படுத்த வேண்டாம் அதனை நீதிமன்றிலும் விமர்சிக்க முடியாது என்றார்.

இதன் பின்னர் தொடர்ந்த சிவாஜிலிங்கம், எங்கள் அமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் போகின்றனர் என்றால், அவர் முன்பு என்ன வண்டிலினிலோ பயணம் செய்தவர் என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் ஊழல் புரிந்தோம் என்று குற்றம் சுமத்துகின்றார். முன்பு ரான் அமைப்பு வைத்திருந்த போது எவ்வளவு ஊழல் நடந்தது என்று எங்களுக்குத் தெரியும். முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு அவர் வந்தால் இவற்றை நான் தெரிவிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். இப்போது எந்த கனமான பதவியும் இல்லை என்றதுதான் அவருக்கு சுடலை ஞானம் பிறக்கின்றது. இவ்வளவு நாள் எங்கிருந்தார். எனவும் சிவாஜி உறுமினார்.

இதனை கேட்டு ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன், உங்களுடைய ரெலோ அமைப்பின் தலைவர் கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது உங்களுக்கு தெரியுமா? யாழ்.போதனா வைத்திய சாலையில் உங்கள் கட்சி பிரச்சனைக்காக துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தானே எனவும் கடுமையாக கூறினார்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினரின் உரையை மாகாண சபையில் விமர்சித்தமையை கண்சால்ட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோர இருதரப்பினரதும் தேவையற்ற விவாதங்கள் கண்சால்டில் இருந்து நீக்குவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

இதன் போது உறுப்பினர்களிடையே நேரம் தாண்டியும் இந்த சண்டை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts