வடக்கு மக்கள் அரசுக்கு துரோகம் செய்துவிட்டனர் :- பசில்

pasil-rajapakshaதுப்பாக்கிக்கும் சயனைட் குப்பிகளுக்கும் பணிந்து போயிருந்த வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி, மக்கள் விருப்பப்படி வாக்களிக்கக்கூடிய ஒரு அமைதியான சூழலை நாமே அமைத்துக்கொடுத்தோம்.

குறிப்பாக இராணுவமே வடக்கில் அமைதி ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் வட பகுதி தமிழ் மக்கள் அதை மறந்து விட்டார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலில் அவர்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு தெரிவித்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ­.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நகர அபிவிருத்தி (புறநெகும) திட்டத்தின் கீழ் திவுலப்பிட்டிய, மீரிகம பிரதேசசபைகளுக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியல் நோக்கம் கருதி அரசு வடக்கின் வசந்தம் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடக்கு மக்களுக்கு வசந்தத்தை ஏற்படுத்தவே வடக்கின் வசந்தம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

வடமேல், மத்திய மாகாண மக்கள் அரசின் மீது வைத்திருக்கும் நல்லெண்ணத்தை நடந்து முடிந்த தேர்தலின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர். வடக்கு மக்களது தேர்தல் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

3 தசாப்தங்களின் பின்னர் வடக்கில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டியமை அரசுக்கு கிடைத்த வெற்றி இந்த வெற்றி பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் சக்தியை அரசுக்கு வழங்கியுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் வடக்கு மக்கள் மட்டுமன்றி தெற்கு மக்களும் நிம்மதியாக வாழ முடியாத ஒரு சூழ்நிலையே காணப்பட்டது. வடக்கில் ஜனநாயக முறை, மக்கள் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் எதுவுமே இருக்கவில்லை.

வடக்கில் தேர்தல் அறிவிக்கப் பட்டதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்துள்ளது.

இதன் மூலம் தமிழ் மக்களது தேவைகளை அவர்களே நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பதிலாக இளைஞர் யுவதிகளை துப்பாக்கி தூக்கும் நிலைக்கு கூட்டமைப்பினர் வழிவகுக்கக்கூடாது. தெற்கு மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.