வடக்கு கிழக்கை இணைக்கவும்: இந்திய எம்.பிக்களிடம் தமிழ்க்கட்சிகள்

india-visit -2வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும் என்றும் அந்த பிரதிநிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,தமிழர் விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரகுமார்,தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே. சிவஞானம், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்தசந்திப்பின் போது, இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது என்றும், அந்த சட்டத் திருத்தத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மாகாண சபை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர்களிடம் தெளிவாக விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பதை அனைவரும் ஒரே தொனியில் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் வடக்கு கிழக்கை இணைப்பதற்கு உதவ வேண்டும். வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தவேண்டும். வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வழியமைக்கவேண்டும்.

அதுமட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதுடன் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.