Ad Widget

வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை! – சம்பந்தன்

நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை. இவர்களின் பிரச்சினையை அவசர நிலைமையாகக் கருதி முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும். இரு கட்சிகளும் இணைந்ததன் முக்கிய குறிக்கோளை அரசு மறந்துவிடக்கூடாது. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வலியுறுத்திய அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. இதனூடாக நாட்டின் பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்சினைகளை கருத்தொருமைப்பாட்டுடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இரு கட்சிகளும் தமது முக்கிய குறிக்கோளை மறந்துவிடக்கூடாது.

நாம் அரசின் பங்காளர்கள் அல்லர். ஆனால், இந்த ஆட்சி உருவாவதற்கு பங்களிப்பும் செய்துள்ளோம் மாற்றத்தை அங்கீகரித்துள்ளோம். நாட்டில் இடம்பெற்ற ஊழல்களை இல்லாதொழிக்கவேண்டும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும்.

வடக்கு, கிழக்கு யுத்தத்தால் ஏற்பட்ட சீரழிவுகளை நீடிக்க இடமளிக்க முடியாது. அந்த மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படவேண்டும். கமத்தொழில், கால்நடை, மீன்பிடி உபகரணங்களை அவர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்காக பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது.

மீள்குடியேற்றம் தொடர்பில் 2017இல் நன்கொடையாளர் மாநாடு நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜபக்‌ஷ ஆட்சியிலிருந்து வித்தியாசமான அணுகுமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. ஆனால் பாரிய மாற்றம் இல்லை.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துள்ளபோதும் பொதுமக்கள் இன்னும் பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளனர். இருப்பினும், ஜனநாயக ரீதியிலான ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சம உரிமை, ஜனநாயகதன்மை, பாதுகாப்புடன் ஒன்றிணைந்த பிரிக்கப்படாத இலங்கைக்குள் வாழ விரும்புகிறார்கள். இதனை எமது மக்கள் தேர்தல் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தொடர்ந்தும் இப்படியே வாழ முடியாது. பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். மக்களின் எதிர்காலம் பற்றிய அரசின் திட்டம் போதாது.

பல தசாப்தங்களாக எமது மக்கள் பாதிக்கப்பட்டபோதும் நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடியவர்களாக உள்ளனர்.

அவர்களை மீட்டெடுக்க சிறந்த திட்டம் தேவை. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் இளைஞர் தொழில்வாய்ப்பு என்பன தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

எனவே, வடக்கு, கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் செயற்படவேண்டும். தாமதம் ஏற்படக்கூடாது என அரசிடம் கோரிக்கை விடுக்கிறேன். இதை அவசர நிலைமையாகக் கருதி அரசு கவனம் செலுத்தவேண்டும் – என்றார்.

Related Posts