வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 65 ஆயிரம் பேர் மனநோயாளிகள்: சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநோயாளிகளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க பதிலளிக்கும் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்த யுத்த நடவடிக்கைகளின்போது வட மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

இவர்களுக்கு எங்கே சிகிச்சை அளிக்கப்படுகின்றது? இவர்களையும் விசேட தேவையுடையவர்களாகக் கருதி நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர்,

மனநோயாளிகள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 1, 271 பேரும், மன்னார் வைத்தியசாலையில் 407 பேரும், வவுனியாவில் 878 பேரும் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஏற்கனவே, யாழ். போதனா வைத்தியசாலையில் 25 ஆயிரத்து 976 பேரும், ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் 18 ஆயிரத்து 361 பேரும், மன்னாரில் 4 ஆயிரத்து 981 பேரும், வவுனியாவில் 9 ஆயிரத்து 355 பேரும், கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 514 பேரும், முல்லைத்தீவில் ஆயிரத்து 287 பேரும் என 62 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், தனியார் தொண்டு நிறுவனங்களும் இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து வருகின்றது என தெரிவித்தார்.