வடக்கு கல்வித்தரத்தை மேம்படுத்த வாக்களிக்கவும்; பிரபா

piraba-ganesanயுத்தத்தினால் பாதிப்படைந்த கட்டடங்கள், பாதைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் போன்றவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை சீர்திருத்திக் கொள்ளலாம். ஆனால் யுத்தத்தினால் தரம் இழந்து போயிருக்கும் வட மாகாண மக்களின் கல்வியை உடனடியாக மேம்படுத்த வேண்டியது கட்டாயமானதாகும் அதனை கருத்தில் கொண்டு வடக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தின் நிர்மான பணி அபிவிருத்திகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விமர்சிக்கின்றார்கள். வெறும் அபிவிருத்தியின் மூலமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது என்று கருதுகின்றார்கள்.

இதனை நானும் ஓரளவு ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், கல்வி துறையில் ஏற்படவேண்டிய அபிவிருத்தியை ஒரு போதும் தேவை இல்லை என்று புறந்தள்ள முடியாது. வட மாகாண தமிழ் மக்கள் கல்விமான்களாக திகழ்ந்த பழைய வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இன்று நடக்கவிருக்கும் தேர்தலானது நாடாளுமன்ற தேர்தல் அல்ல. மாகாணசபை தேர்தலே. மாகாணசபை மூலமாக நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதங்கள் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவையே. ஏனைய பொலிஸ், காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கம் ஒரு போதும் வழங்கப் போவதில்லை.

சுகாதாரம் போக்குவரத்து போன்றவை மத்திய அரசாங்கத்திற்குள்ளும் பெரும் பகுதி இருப்பதனால் அவை வடமாகாண மக்களுக்கு கிடைத்து வருகின்றது. ஆனால், மாகாண கல்வி அதிகாரம் ஆளுநரின் கையிலேயே தங்கியிருந்துள்ளது. வட மாகாணசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைப்பற்றுவார்களேயாயினும் ஏனைய மாகாணங்களைப் போன்று உடனடி வருமானம் மாகாண நிர்வாகத்திற்கு கிடைக்கப் போவதில்லை.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து எமது கல்வி துறையை அபிவிருத்தி செய்வதற்கான நிதியுதவியை கேட்டுப் பெறக்கூடிய அரச தரப்பு மாகாண பிரதிநிதி தேவை என்பதை வவுனியா மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனையே நாம் ஆதரிக்கும் வேட்பாளர் உதயராசா நிறைவேற்றி வைப்பார் என உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.

வட மாகாண மக்களுடன் இணைந்து வாழும் சுமார் 80 ஆயிரம் மலையக இந்திய வம்சாவளி மக்களின் இருபத்தி இரண்டாயிரம் வாக்காளர்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எந்தவொரு இந்திய வம்சாவளி வேட்பாளருக்கும் பட்டியலில் இடங்கொடுக்கவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். எம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்த பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வன்னி மாவட்ட இந்திய வம்சாவளி தமிழர்களைப் பற்றி தெளிவு படுத்தியிருந்தேன். இருப்பினும் அவர்களைப் பற்றிய அக்கறை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இருப்பதாக தெரியவில்லை. இன்று முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்திரலான இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அனைத்து வடமாகாண தமிழ் மக்களுக்கும் பதவியில் இல்லாத போதும் பல அறிய சேவைகளை முன்னெடுத்து வரும் முதன்மை வேட்பாளர் ப.உதயராசா மாகாணசபையில் அதிகபடியான வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்பது வவுனியா மாவட்டத்தில் நான் மேற்கொண்ட பிரச்சாரத்தின் மூலமாக தெரிந்து கொண்டேன். உதயராசாவிற்கு வாக்களிப்பது அரசாங்கத்திற்கு வாக்களிப்பதாக மக்கள் நினைக்கத் தேவையில்லை. மாறாக வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து தமது விருப்பு வாக்கை உதயராசாவிற்கு வழங்குவதன் மூலமாக வவுனியா மாவட்ட தமிழ் மக்களின் தமிழ் கல்வியின் தராதரத்தை மேம்படுத்துவதாக நினைக்க வேண்டும்.