Ad Widget

வடக்கில் மீள்குடியேற்றத்தை ஆராய அதிகாரிகள் மட்டத்திலான குழு – ஜனாதிபதி

வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

இது பற்றி ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையியேலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“வடக்கில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கருத்து வெளியிட்டனர். அந்தவகையில், காடழிப்பை தடுத்து நிறுத்துவது சம்பந்தமாக இராணுவம், பொலிஸ், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர்கள் ஆகியோருடன் சில மாதங்களுக்கு முன்னர் நான் பேச்சு நடத்தினேன்.

குறிப்பாக காடழிப்பைத் தடுத்துநிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் அதிகாரிகளே ஏற்கவேண்டும் எனறும் இதன்போது வலியுறுத்திக் கூறியிருந்தேன்.

வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மீள்குடியேற்றத்துக்காக 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரையும் அதேபோல் 2014 ஆம் ஆண்டு செம்டெம்பர் 15ஆம் திகதியும் காணிகள் பெறப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டும் அரசியல் காரணங்களுக்காக இந்தக் காணிகள் வழங்கப்பட்டன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மன்னாரில் 2500 ஏக்கர், வவுனியாவில் 325 ஏக்கர், முல்லைதீவில் 325 ஏக்கர வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், கிளிநொச்சியிலும் காணிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன. எனவே, மீள்குடியேற்றத்துக்காக காணிகள் பொறுப்பேற்கப்படடிருந்தாலும காடழிக்கப்பட்டிருந்தால் உடடியாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வடக்கில் குறித்த பிரதேசங்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் நேரில் அனுப்பிவைத்து நிலைமைகள் ஆராயப்படும். அதற்குப் போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படும். சபையில் காடழிப்பு பற்றி பேசிய இருதரப்பு எம்.பிக்களும் அதிகாரிகள் குழுவுடன் அங்கு நேரில் செல்ல முடியும்.

அதிகாரிகள் அங்கு நிலைமைகளை ஆராய்ந்தப் பின்னர் ஒரிரு வாரத்துக்கள் அறிக்கை பெறப்பட்டு மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டவிரோத காடழிப்பு, மண், கல் அகழ்வுக்கு எதிராக பாராபட்சமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இரத்தினக்கல் அகழ்வுக்குரிய அனுமதிப் பத்திரம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படாது. ஜனாதிபதித் தேர்தலின்போதும் நான் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தேன்” – என்றார்.

அதேவேளை, இந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,

“வில்பத்து வனத்தில் ஒரு அங்குலத்தைக்கூட மக்கள் பிடிக்கவில்லை. சூழலியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சில இனவாதிகளும், மதவாதிகளுமே போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மஹிந்த ஆட்சியிலிருந்து வெளியேறியப் பின்னர் எனக்கு எதிராக இனவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 19ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றுக்கு தயாராகுமாறு சிலர் அழைப்புவிடுத்துள்ளனர். ஒரு அங்குலத்தையேனும் மக்கள் பிடிக்கவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு சவாலும் விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

Related Posts