வடக்கில் திட்டமிட்டவாறு தேர்தல் நடத்தப்படும் – கிளிநொச்சியில் ஜனாதிபதி

mahinda_rajapaksaவடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்…

கடந்த 30 ஆண்டுகளில் அழிக்கபட்டவற்றை நாம் மீளப் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். யுத்தம் 30 ஆண்டுகள் நடைபெற்றது, ஆனால் அபிவிருத்தி நான்கு ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.

வித்தியாசத்தை நீங்களே பாருங்கள். உங்கள் பிராந்தியம் துரிதமாக அபிவிருத்தியடைகிறது. அது மேலும் அபிவிருத்தியடைய வேண்டும்.

திட்டமிட்டபடி வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறும். வடபகுதி மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் சுதந்திரம் உண்டு. நீங்கள் தெரிவுசெய்யும் அவர்கள் இப் பிராந்தியத்தை மேலும் அபிவிருத்தி செய்வார்கள்.

இனவாத அரசியல் அபாயகரமானது. இந்த நாட்டுக்கு குறுகிய அரசியல் போக்கு தேவையில்லை. தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அழிந்துவிடாத வகையில் நீங்கள் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி.

கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பிராந்தியம் வீடமைப்பு, பாதை அபிவிருத்தி, மின்சக்தி, கல்வி, சுகாதாரம், வர்த்தகம், வங்கியலுவல்கள் உள்ளிட்ட பல் துறைகளில் புதிய வசதியை பெற்றுள்ளது.

மேலும் பல வசதிகளை இப்பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்போம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் உறுதியளித்தார்.