வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கர் காணி’

வட மாகாணத்தில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

CVK-Sivaganam

வடமாகாண காணிப்பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்று வரை முப்படைகளாலும் வடமாகாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பலர் காணிகள் இல்லாமல் இருக்கின்றனர். அத்துடன், காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு காணிகள் இல்லை. அவை இராணுவத்தின் வசமிருக்கின்றது.

காணியின் உரிமை அந்தந்த மாகாணங்களிற்கு உண்டு. ஆகவே அந்தந்த மாகாணங்களிற்கு காணி உரிமைகள் வழங்கப்படுவதன் ஊடாக காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்தார்.

மேலும் அடுத்த வடமாகாண சபை அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.