Ad Widget

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச் சுத்திகரிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரசாரம் செய்தமை முஸ்லிம்களின் காட்டிக் கொடுப்பாகவே தமிழர்கள் கருதுவதாகவும் அவர் கூறினார்.

வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடை ந்திருப்பதை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இரு சமூகமும் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதானது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முதற்படியாக அமையும் என்றும் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில்,

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இனச் சுத்திகரிப்பு தொடர்பில் வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற ரீதியில் எனது தலையை வெட்கத்தில் குனிந்துகொள்ளவேண்டியுள்ளது. தமிழ் மக்கள் உறவாக இருக்கும் காரணத்தினால் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த சிவசிதம்பரம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளி யேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அழைக்கப்பட்ட பின்னரே வடக்கில் மீண்டும் கால் பதிப்பேன் எனக் கூறி அவர் வெளியேறியிருந்தார்.

இறுதியாக உயிரற்ற அவருடைய உடல் மாத்திரமே வடக்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இவர் மாத்திரமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இதனைக் கண்டித்திருந்தனர்.

அதேநேரம், இச்சம்பவம் தொடர்பில் தமிழ் மக்களுக்கும் கடமையொன்று உள்ளது. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்திருந்தால் எல்.ரி.ரி.ஈயினர் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றுவதைத் தடுத்திருக்க முடியும். இதற்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழரும் ஏற்கவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் தமது மீள்குடியேற்றத்தில் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு என்ற ஆதங்கம் வடபகுதி முஸ்லிம் மக்களிடம் தொடர்ச்சியாக இருக்கிறது. இதில் உண்மையும் உள்ளது.

எங்கள் மக்கள் மீது இனப்படுகொலை நடக்கின்றது என்று நீதிக்காக நாங்கள் கதறுகின்றோம். இந்த அழுகுரல் உலகத்துக்கு கேட்காமல் இருப்பதற்குக் காரணம் எங்களுடைய நிலத்தில் இனச்சுத்திகரிப்பு ஒன்று ஏற்பட்டுள் ளதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாகும்.

வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோது இந்தக் கருத்தை நான் கூறியிருந்தேன். எனினும் இவ்வாறான பேச்சுக்கள் எனது அரசியல் எதிர்காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இருந்தபோதும் நடைபெற்ற தேர்தலில் எனது நிலைப்பாட்டை தெளிவாக விளங்கிக்கொண்ட மக்கள் வாக்களித்துள்ளனர்.

நீங்கள் இதையெல்லாம் சொல்கிறீர்கள், முஸ்லிம் மக்கள் எமக்கு எதிராக மேற்கொண்ட அநீதிகளை முஸ்லிம் தலைவர்கள் சொல்கிறார்களா? அவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை முஸ்லிம் தலைவர்கள் எடுத்துச்சொல்வதில்லை என பலர் என்னிடம் கேட்டுள்ளனர். அது அவர்களுடைய விடயம் என நான் அவர்களுக்குப் பதிலளித்தேன்.

கஷ்டமாக இருந்தாலும் இந்த விடயங்கள் தமிழ் முஸ்லிம் உறவில் காணப்படும் ஆதங்கங்களை வெளிப் படுத்தலாம் என நினைக்கின்றேன். நல்லிணக்கத்தை நோக்கி முன்னோக்கி நகர்வதற்கு முதற்படி நாங்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகும். ஆனால் அதனைச் செய்யத் தவறினால் நல்லிணக்கத்தை நோக்கி இரண்டாவது படியை எடுத்து வைக்க முடியாது.

தமிழ் மக்கள் கூறுவது முஸ்லிம் மக்களுக்கு எதிரானவை அல்ல. கிழக்கில் நிகழ்ந்த பல சம்பவங்களை பட்டியல் படுத்திக்கொடுக்க அவர்கள் தயாராக இருப்பார்கள். எனினும், குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிரான பல விடயங்களையே அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2012ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அமைச்சர் ஹக்கீம் அந்தப் பிரரேரணை நிறை வேற்றப்படக்கூடாது என அங்கு சென்று பரிந்துரை செய்தார்.

ஆனால் தம்புள்ளை மற்றும் அளுத்கமை சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் 2014ஆம் ஆண்டு மார்ச்சில் முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விசாரணையை எழுத்தில் கேட்டிருந்தனர். தமிழ் மக்கள் இதனை காட்டிக்கொடுத்த செயலாகக் கருதுகிறார்கள்.

நல்லாட்சி மற்றும் ஆட்சி மாற்றம் பற்றி பேசுகின்றோம். தற்பொழுது இருப்பது நல்லாட்சி என்றால், முன்னர் இருந்தது தீயது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

அந்தத் தீய ஆட்சியில் இறுதிவரை பதவியிலிருந்த ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் தற் பொழுது இந்தப் பக்கம் வந்து நல்லாட்சி எனக் கூறுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற விடயங்களை நாங்கள் வெளிக்கொண்டுவந்து, அவற்றை ஏற்றுக்கொண்டு பேசாமலிருந்தால் நாட்டையும் நல்லிணக்கத்தையும் முன்கொண்டு செல்வதற்கான வழியை ஏற்படுத்த முடியாது.

அது மாத்திரமன்றி தமிழ் முஸ்லிம் உறவிலும் முன்னேற்றம் ஏற்படாதென அவர் மேலும் கூறினார்.

Related Posts