வடக்கின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் 90 விழுக்காடு சிங்களவர்கள் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

மத்திய அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில் வடக்கில் 90 விழுக்காடு சிங்களவர்களே இடம்பெற்றிருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நியமனங்கள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்,

வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மூன்று தசாப்தகாலப் போர் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பில் இருந்து எமது விவசாயிகள் மீண்டெழ முடியாதவாறு இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், பாதிப்புகளை மேலும் அதிகரிக்கும் விதமாக, மத்திய அரசாங்கத்தால் தற்போது வழங்கப்படவுள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் வடக்கில் 90 விழுக்காடு சிங்கள மக்களே இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் ஆவணி 13ஆம் திகதி வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில் வடக்குக்கான 361 பேரில் 332 பேர் சிங்களவர்கள் ஆவர். இவர்களில், மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் 164 பேரும், கிளிநொச்சியில் 41 பேரும், முல்லைத்தீவில் 53 பேரும், வவுனியாவில் 40 பேரும், மன்னாரில் 34 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட 29 தமிழர்களில் யாழ்ப்பாணத்தில் 23 பேரும், கிளிநொச்சியில் 04 பேரும், வவுனியாவில் 02 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.

முல்லைத்தீவிலும் மன்னாரிலும் ஒரு தமிழரேனும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் எனப்படுவோர் நேரடியாக விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் விவசாய அபிவிருத்தியில் பெரும் பங்களிப்பு நல்க வேண்டியவர்கள்.

விவசாயிகளுடனான தொடர்பாடலுக்கு மொழி ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது. இதன் காரணமாகவிவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கான தேர்வுப் பரீட்சை நாடளாவிய பொதுப் பரீட்சையாக இருந்தபோதும் நியமனத் தேர்வுகள் மாவட்ட ரீதியாக இடம்பெறுவதே பொருத்தமானது. பொதுநிர்வாக சுற்றறிக்கை இல 15-90 இன்படி, பணிவெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த அந்த மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவர்களில் இருந்தே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், தென் இலங்கையில் ஏராளமானவர்களைத் தெரிவு செய்த மத்திய அரசாங்கம் அங்கு போதிய ஆளணி வெற்றிடங்கள் இல்லாததால், அவர்களில் ஒரு தொகுதியினரை வடக்குக்கு அனுப்ப முன்வந்துள்ளது. இதனை அனுமதித்தால் மொழிப்புரிதலின்மை காரணமாக எமது விவசாயத்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்பது திண்ணம்.

விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கான தேர்வுப் பரீட்சைக்கு வடக்கில் இருந்து 5000 பேர் வரையில் தோற்றியிருந்தபோதும் 29 பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். மிகுதி வெற்றிடங்களை தென் இலங்கை வாசிகளைக் கொண்டு நிரப்புவதன் மூலம் மத்திய அரசு எமது விவசாயத்துக்குப் பாதகம் செய்திருப்பதோடு மாத்திரம் அல்லாது, எமது இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் தட்டிப்பறித்திருக்கிறது.

தென் இலங்கை மக்களுக்குரிய தேர்தல் சலுகையாக வழங்கப்பட்டுள்ள நியாயமற்ற இந்நியமனங்கள் மூலம் தமிழ்மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் இந்நியமனங்களை உடனடியாக நிறுத்தி, மீளாய்வு செய்து, மாவட்ட ரீதியான தெரிவுமுறைமையை நடமுறைக்குக் கொண்டுவரவேண்டும். அதுவரை, இதற்கு ஏதுவாக அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்று குறிப்படப்பட்டுள்ளது.

Related Posts