வங்களா விரிகுடாவில் வலுவிழந்த தாழமுக்கம்! இலங்கையை நோக்கி நகரும் சாத்தியம்!

srilanka_mapநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மீனவர்கள் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக திருகோணமலை வரையான கடற் பரப்பிற்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏனைய பகுதிகளில் கடலுக்குச் செல்லும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் வலுவிழந்துள்ளபோதும், இலங்கையை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

தாழமுக்கமும் தென்கிழக்கு பருவப்பெயர்ச்சியும் நாட்டில் சீரற்ற காலநிலையை தோற்றுவித்திருப்பதனால், கடலில் கடுங்காற்றுடன் மழை பெய்வதுடன், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக திருகோணமலை வரையான கடலில் அடிக்கடி பாரிய கொந்தளிப்புகள் இடம்பெற வாய்ப்பிருப்பதனால், கடற்றொழிலுக்கு செல்பவர்கள் இக் குறித்த காலப் பகுதிக்குள் கடலுக்குச் செல்வதனை தவிர்ப்பதே சிறந்ததென்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும், மழையுடன் காற்றும் இக்காலப் பகுதியில் அதிகமாக இருப்பதுடன், எவ்வித அறிகுறியும் இல்லாது திடீரென மழை பெய்யுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் இயல்புநிலை முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.