”வடக்கு கிழக்கில் ராணுவத்தால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாணவி கிருஷாந்தி படுகொலையின் 21ஆவது வருட நினைவுதினம், அவர் கொலையுண்ட செம்மணி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந் நினைவு தின நிகழ்விற்கு அவர் அனுப்பிவைத்திருந்த செய்தியிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு நேர்ந்த கதிக்கு கிருஷாந்தியின் கொலை ஒரு எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர், ராணுவத்தினரால் நடத்தப்பட்ட குற்றச்செயல்களுக்கு ஒரு அடையாளமாகவும் இக் கொடூரச் செயல் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
வேலியே பயிரை மேய்வது போல் பாதுகாப்புப் போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தனர் என குறிப்பிட்ட அவர், இது போன்ற அவலங்கள் இனிமேலும் நடவாதிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்களை பெறுவதற்கு போராடுகிறோம் என மேலும் தெரிவித்தார்.