Ad Widget

யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி??

யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 23/2 நேற்றைய தினம் எழுப்பிய வினா

dak-daklas-devanantha-parliment

யாழ்.மாவட்டத்தில் 32 நலன்புரி நிலையங்களில் 1318 குடும்பங்களில் 4737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய அடிப்படைத் தேவைகள் தொடர்பில் உரிய தரப்பினர் காலத்திற்குக்காலம் தேவையான நடவடிக்கைகளை போதியளவு எடுக்கவில்லையென்பதனை அறியத்தருவதுடன்,
யாழ்மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்ற மக்களுடைய உடனடித் தேவைகளாகிய அவர்கள் வசித்துவரும் தற்காலிக வதிவிடங்களைத் திருத்துதல், மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றினை மேம்படுத்துதல் தொடர்பில் கடந்த காலங்களில் கூடிய கவனம் எடுக்கப்பட்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு மழை காலத்திற்கு முன்பாக நலன்புரி நிலையங்களுடைய தேவைகள் அடையாளம் காணப்பட்டு மக்களுடைய மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக வதிவிடங்களுடைய கூரைகள் திருத்தப்படுதல் வேண்டும்.

ஆரம்ப காலங்களில் கொடுக்கப்பட்டு வந்த உலர்உணவுகள் இடையில் நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் நாளாந்த உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர். ஆகையால், அவர்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேறும் வரை இவ் உலர்உணவு வழங்கும் நடைமுறை தொடருதல் வேண்டும்.

மேற்படி நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்ற வறிய மாணவர்கள் கல்வியில் அபிவிருத்தி பெறுவதற்கு அவர்களுக்கு பாடசாலைக்கல்விக்கு மேலதிகமாக விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் கல்வி வசதிகள் வழங்கப்படுதல் வேண்டும்.

இந்த நலன்புரி நிலையங்களிலே மிகவும் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

மேற்படி நலன்புரி நிலையங்களிலே வாழ்ந்து வருகின்ற கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உரிய வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

சில நலன்புரி நிலையங்களிலே முன்பள்ளிகள் இருந்தாலும் அவை சீராக இயங்க வைக்கப்படவில்லை. முன்பள்ளிகள் இல்லாத சகல நலன்புரி நிலையங்களிலும் முன்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படுதல் வேண்டும். இருக்கின்ற முன்பள்ளிகள் யாவும் மேம்படுத்தப்படுதல் வேண்டும்.

கடந்த காலங்களில் விசேட அமைச்சரவை பத்திரம் மூலம் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, யாழ்.மாவட்டச் செயலகத்தினால் நலன்புரி நிலையங்களினுடைய தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.
தற்சமயம் நலன்புரி நிலையங்கள் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென அங்கு வசிப்பவர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் மீள்குடியேற்ற புனர்நிர்மாண மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் எனது கேள்விகளுக்கான பதில்களை இந்த மேலான அவைக்கு வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

1. கௌரவ டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்ற புனர்நிர்மாண மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்களைக் கேட்பதற்கு
(அ) (i) யாழ்மாவட்டத்தில் 32 நலன்புரி நிலையங்களில் 1318 குடும்பங்களில் 4737 அங்கத்தவர்கள் வசித்து வருவதனை அறிவாரா?
(ii) ஆம் எனில் அங்கு வசிக்கின்ற மக்களுக்கான உலர்உணவு, குடிநீர், மலசலகூட வசதிகள், கல்வி வசதிகள், முன்பள்ளி, நலன்புரி நிலைய கூரைத்திருத்த வேலைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் ஆகியன தொடர்பில் குறைபாடுகள் இருப்பதனை அறிவாரா?
(iii) ஆம் எனில் இது தொடர்பில் நலன்புரி நிலையங்களுக்கான அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், கல்வி மேம்பாடு ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
(iஎ) ஆம் எனில் இது தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி பற்றியும், வேலைகள் பற்றியும் இந்த அவைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?

Related Posts