Ad Widget

யாழ் பல்கலை மனிதவுரிமை மீறல் – (மேலும் செய்திகள்)

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை ( 28.11.2012 ) படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் புலனாய்வாளர்களின் உதவியுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வுகளை குழப்புவதற்கு படையினர் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக பிரதான வாயில் கதவைப் பூட்டி உள்ளே பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

* இராணுவமே பெண்கள் விடுதியின் உள்ளே நுழைந்தது நியாயமா?
* இராணுவமே பல்கலைக்கழகத்தினுள் உனக்கு என்ன வேலை?
* பல்கலைக்கழக நிர்வாகமே பல்கலைக்கழக மாணவர்களுக்கு யார் பொறுப்பு?
* இராணுவமே பல்கலைக்கழக விடுதியினுள் உன்னை அனுமதித்தது யார்?
* இராணுவ அராஜகத்தை அனுமதித்த நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம்.
* ஆயுத முனையில் எம்மை அடக்கினாலும் எமது மன உணர்வுகளை உன்னால் அடக்க முடியாது!
* நல்லிணக்கம் என்பது உணர்வுகளை நசிப்பதா?
* ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை வெளிப்படுத்த எமக்கு உரிமை இல்லையா?
ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி, கறுப்புத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துணைவேந்தரே இங்கு எதற்காக இருக்கிறீர்? படையினர் மாணவர்களை அச்சுறுத்துகின்றனர். அப்படியானால் இந்த நிர்வாகம் எதற்கு? இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்க யாழ்ப்பாணத்தில் எவரும் இல்லையா என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து பிரதான வாயின் ஊடாக மாணவர்கள் புறப்பட்டு போக்குவரத்துத் தடை ஏற்படாத வகையில் அருகில் உள்ள மற்றொரு வாயில் ஊடாகப் பேரணியாகச் சென்றனர்.

இதன்போதே யாழ். பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி “போகவேண்டாம். திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறினர். மாணவர்கள் காரணம் கேட்க முற்பட்ட போது வாகனங்களில் இருந்து குதித்த பொலிஸார் மாணவர்களை கண்டபடி கலைத்துக் கலைத்து தாக்கத் தொடங்கினர்.

பொலிஸாருடன் படையினரும் இணைந்து மாணவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் தமது குறிப்புப் புத்தகங்கள், பாதணிகளைக் கழற்றிவிட்டு தப்பி ஓடினர். சில மாணவர்களை பொலிஸார் தரையில் விழுத்தி அடித்தனர். தரதரவென இழுத்துச் சென்றனர். இராணுவத்தினர் துப்பாக்கியால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் அடித்துத் துரத்தப்பட்டமையால் அவர்களுடைய குறிப்புப் புத்தகங்கள், பாதணிகள் வீதியில் சிதறுண்டு கிடந்தன.இதன்போது ஊடக மாணவர்கள் உட்பட நான்கு பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.

அந்த இடத்துக்குச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஓடிச்சென்று புகுந்த பின்னர் பொலிஸார் மீதும் படையினர் மீதும் சரமாரியாக கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை உருவாகியது.

பின்னர் பதில் துணைவேந்தர் தலைமையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து பொலிஸாருடன் கலந்துரையாடினர். எனினும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே புறப்படாத வகையில் படையினர் குவிக்கப்பட்டிருந்ததால் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான பஸ்ஸில் மாணவர்கள் ஏற்றப்பட்டு பஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விடப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் பொலிஸார், படையினர் முன்னிலையில் சிவில் உடையில் இருந்த சிலரால் அடித்து நொருக்கப்பட்டது.

மாணவர்கள் தாக்கப்பட்டமை, நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊடகத்துறை மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் முதலில் மூன்று மாணவர்களைப் பொலிஸார் விடுவித்தனர். ஊடக மாணவரை அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தனர். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊடகத்துறை மாணவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எடுத்துக் கூறியும் அவரைப் பொலிஸார் விடுவிக்கவில்லை.பின்னர் பல்கலைக்கழக உரிய பீடத்துடன் தொடர்புகொண்டு பதிவுகளை உறுதிப்படுத்தியதையடுத்து அந்த மாணவரும் பொலிஸாரால்விடுவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.காவல்த்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருதியுமே வகுப்பு புறக்கணிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டது.

தொடர்நது இரண்டு நாட்களுக்கு வகுப்பு புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.இதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தினர் குறிப்பிட்டனர்.இதன்போது, குறித்த அலுலவகத்தில் காணப்பட்ட பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

படங்களுக்கு

Related Posts