யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் பிரதம பாதுகாப்பு அதிகாரி கலைப்பீட மாணவர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

jaf-uni-2

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் துவிச்சக்கர வண்டிகள் அனைத்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நுழைவுச் சீட்டு பெற்று உட்சென்று மீண்டும் திரும்பி வருகையில் அதனை ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (30) மாணவன் ஒருவனின் துவிச்சக்கர வண்டியின் திறப்பு தவறவிடப்பட்ட நிலையில் அதன் பூட்டினை கலைப்பீட மாணவர்கள் உடைக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, பதில் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தரான வி.தூயகுமார் பூட்டு உடைப்பதினைத் தடுத்ததுடன், பாதுகாப்புக் காரியாலயத்தில் உரிய பதிவுகளைச் செய்து வண்டியை எடுத்துச்செல்லுமாறு கூறினார்.

இதன்போது குறித்த மாணவர்களினால் அந்த உத்தியோகத்தர் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் பல்கலைக்கழக பதிவாளர் முன்னிலையிலே இடம்பெற்றதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

எனவே குறித்த மாணவர்கள் மீது ஒழுக்காறு நடவடிக்கை எடுக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

Related Posts