யாழ். நகரில் வர்த்தக நிலையங்களின் விபரங்கள் திரட்டும் புலனாய்வு பிரிவினர்: பீதியில் வர்த்தகர்கள்

investigation_CIயாழ்.நகரப் பகுதியிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களிடம் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக இந்தச் சம்பவம் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ்.நகரின் மையப்பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் நீண்டகாலமாக இயங்கி வருகின்றன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மணிக்கூட்டு நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சிவில் உடையில் சென்ற இருவர் தம்மை படைப்புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் யார்? வர்த்தக நிலையத்தில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்? அடையாள அட்டை இலக்கம் என்ன? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் யாராவது பணிபுரிகின்றனரா? என்ற விவரங்களை அவர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதேவேளை, சிவில் உடையில் இருவர் வர்த்தக நிலையங்களுக்குள் விசாரணை செய்த போது வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் ஆயுதம் தரித்த படையினர் நின்றிருந்ததாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வர்த்தக சங்கத்திடம் கேட்டபோது இது தொடர்பில் தமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென்று அவர்கள் தெரிவித்தனர்.