யாழ். நகரில் இருந்து இறுதி பஸ்சேவை இரவு 9 மணிக்கு நடத்தக் கோரிக்கை; போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு விடயம்

யாழ். நகரில் இருந்து இரவு 9 மணிக்கு கடைசி பஸ்சேவை இடம் பெறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தலைவர் எஸ். சத்தியேந்திரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இரவு நேர பஸ் சேவைகள் மேலும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது போக்குவரத்து துறை அமைச்சரதும், அதிகாரிகளதும் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சேவைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இரவு 9 மணிவரை நீடிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள அவர் இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் தற்போது ஒரு அமைதியான சூழ் நிலை காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் தமது தேவைகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

ஆனால் இரவு நேரத்தில் நேரகாலத்துடன் நிறுத்தப்படும் போக்குவரத்துச் சேவைகளால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.

இந்தக் குறைபாடு குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் அது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்சேவை இரவு 8 மணியுடனும் தனியார் பஸ் சேவை இரவு 7 மணியுடனும் நிறுத்திக் கொள்ளப்படுகின்றன.

இதுவரை காலமும் தங்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காக கொழும்புக்குச் சென்றுவந்த யாழ்ப்பாணத்தின் பல்வேறுபட்ட பகுதிகளையும் சேர்ந்த மக்கள், தற்போது அவற்றை யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்றக் கூடிய சூழல் தோன்றியுள்ளது.

அவ்வாறு வர்த்தக நோக்கங்களுக்காகவும் மருத்துவ மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் யாழ்ப்பாணம் வரும் மக்கள், இரவு 8 மணியோடு நிறுத்தப்படும் பஸ் சேவைகளால் மிகவும் அல்லலுறுகின்றனர்.

எனவே இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் அவதானம் எடுத்துச் செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.