யாழ். நகரப்பகுதியில் துணிகரமாக நடமாடும் வாள்வெட்டு கும்பல்!

யாழ். நகரப்பகுதியில் நேற்றிரவு துணிகரமானமுறையில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் பரவலாக வாள்வெட்டுக்குழுக்கள் நடமாடிவருகின்ற நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றது.

நேற்று மாலை யாழ். கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டன. அதேவேளை நேற்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதி வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் 3 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் அடங்கியுள்ள குழுவினர் வாள்களுடன் நடமாடியுள்ளனர்.

இவர்கள் வாள்களுடன் நடமாடியுள்ளதுடன் வாள்களை காப்பெற் வீதியில் உரசியபடி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். பழைய காவல் நிலையம், சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் அலுவலகம், பிரதி காவல்துறைமா அலுவலகம் என்பனவற்றுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே நடைபெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பிரதிப் காவல்துறைமா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இவ்விரு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

யாழ். பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டுக்குழுக்கள் துணிகரமாக இயங்குவது எவ்வாறு என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.