யாழ் செயலக அதிகாரிகள் அசமந்தம் – மனித உரிமை அணையாளரிடம் பட்டதாரிகள் முறைப்பாடு

graduationயாழ் . மாவட்ட செயலகம் , பிரதேச செயலகங்கள் , திட்டமிடல் பணிப்பாளர்களின் அசமந்தப்போக்கினால் தமக்கான நிரந்தர நியமனங்கள் தாமதமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்ற யாழ் . மாவட்ட பட்டதாரி உத்தியோகஸ்தர்கள் , தமக்கான நியமனங்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகளின் ஆணையாளருக்கு மனுஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர் .

அந்த மனுவில் ,

யாழ் . மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதே ஆண்டு ஜீலை மாதம் 2 ஆம் திகதி 2000 இற்கு அதிகமான பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனங்கள் வழங்கப்பட்டன . யாழ் . மாவட்டச் செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களிலும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பயிலுநர்களாக நியமிக்கப்பட்டனர் . அத்துடன் ஏனைய திணைக்களங்களிலும் இவர்கள் பயிலுநர்களாக உள்வாங்கப்பட்டனர் . ஆறு மாதங்களில் நிரந்தர நியமனம் என்ற அடிப்படையிலேயே நாங்கள் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் பயிலுநர்களாக உள்வாங்கப்பட்டோம் . அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் .

ஆனால் , பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு எமது பயிலுநர் காலம் இரட்டிப்பாக்கப்பட்டது . அதாவது , ஒரு வருடத்தின் பின்னரேயே நிரந்தர நியமனத்திற்குள் நாம் உள்வாங்கப்படுவோம் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது . அந்தக் காலமும் 2013.07.02 ஆந் திகதியுடன் நிறைவடைந்துள்ள போதிலும் எமக்கான நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை . யாழ் . மாவட்டச் செயலகத்தின் செயற்றிறன் அற்ற தன்மையாலேயே எமக்கு நியமனம் வழங்கல் பின்தள்ளப்படுகின்றது . ஆறு மாதங்களில் நிரந்தர நியமனம் என்று கூறி உள்வாங்கப்பட்ட எங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாமையால் நாங்கள் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் .

குறிப்பாக , எங்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் 25 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையான ஊதியத்துடன் பணியாற்றிய நிலையில், ஆறு மாதங்களில் அரச நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த தொழில்களை உதறித்தள்ளிவிட்டு பயிலுநராக வந்து இணைந்தோம் . ஆனால் எமது நிரந்தர நியமனம் தொடர்ந்தும் பின்தள்ளப்படுவதால் எமது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது . ஒன்றரை வருடங்களாக பட்ட கடன்களை மீள அடைக்க வழி தெரியாததால் எங்களில் பலர் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் . சிலர் தற்கொலை மனநிலைக்குச் சென்று காப்பாற்றப்பட்டிருக்கின்றனர் . இன்னும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர் .

எமக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்பட்ட பின்னர் யாழ் . மாவட்டத்தில் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன . குறிப்பாக எமக்கு இளையவர்கள் பலருக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனங்கள் , கிராம அலுவலர் நியமனங்கள் , முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் , ஆசிரியர் நியமனங்கள் போன்றன வழங்கப்பட்டிருக்கின்றன . சுகாதாரத் திணைக்களங்களிலும் பலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன . பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எங்களைப் பார்த்து பட்டதாரிப் பயிலுநர்கள் என்று ஏளனமாக அழைக்கின்றனர் . இது எமக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது . அந்தந்த இடங்களில் இருந்து பார்த்தால் தான் அதிகாரிகளுக்கு இந்த வேதனை புரியும் .

இதனைவிட , எங்கள் நிரந்தர நியமனங்கள் இழுத்தடிக்கப்படுவதால் தொடர்ந்தும் நாங்கள் பிறருக்குப் பாரமாக , பிறரில் தங்கி வாழ்வோராக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது . எமது பட்டதாரிப் பயிலுநர்களில் பலருக்கு 33 தொடக்கம் 35 வயதுக்கு மேலாகிவிட்டது . ஆனால் தொழில் இன்மையால் அவர்கள் இதுவரை திருமணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் . இது அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் ஒரு செயற்பாடாகும் .

நான்கு வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற எங்களுக்கு ஒன்றரை வருடங்கள் பயிலுநர் கடமை . எந்த நாட்டிலும் நடைபெறாத அதிசயமான செயற்பாடு இதுவே ஆகும் . சட்ட ரீதியாக நோக்குகின்ற போது எங்களுக்கு உரிய நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதானது அடிப்படை மனித உரிமை மீறலாகும் .

எனவே , இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினராகிய நீங்கள் உரிய கவனம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றோம் . இன்னும் சில வாரங்களில் எங்களுக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தர ஆவன செய்வீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் . நம்புகின்றோம் .

ஏனைய மாவட்டங்களிலுள்ள சில மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலர் பிரிவுகளிலும் பணியாற்றுகின்ற பட்டதாரிப் பயிலுநர்களுக்கு 2013.07.02 ஆந் திகதியிடப்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன . அந்த திகதியிலிருந்து அவர்களுக்கு உரிய வேதனம் கிடைக்கும் என்றும் இதுவரை 10 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டமையால் 2013.07.02 இலிருந்து நிரந்தர நியமனம் என்று கருதப்பட்டு எஞ்சிய தொகை சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது . ஆனால் , இதுவரை அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படவில்லை . நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பின்னரும் 10 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது .

ஆனால் , எமது மாவட்டத்தில் இந்த நிலை நடைபெறாமல் தாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் . எமக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருவதுடன் உடனடியாகவே எமக்கான உரிய ஊதியத்தை வழங்க ஆவன செய்வதுடன் எமக்குரிய எஞ்சிய தொகையையும் உனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம் .

என்று அவ் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.